நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் : மன்னிப்பு கேட்டு தன்யா பாலகிருஷ்ணா அறிக்கை

தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கிண்டல் செய்து 12 ஆண்டுகளுக்கு முன் வலைதளத்தில் பதிவிட்டதற்கு இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் கன்னட நடிகை தன்யா பாலகிருஷ்ணா.

தமிழில் ‛‛ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணா. 12 ஆண்டுகளுக்கு முன் சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பாக அப்போது ‛‛தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்தீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம். உங்களுக்கு வெட்கமே இல்லையா'' என்று தமிழர்களை கிண்டல் செய்து வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த விஷயம் அப்போது சர்ச்சையாகி அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இவர் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இந்த விஷயம் தான் இப்போது மீண்டும் பிரச்னையாகி உள்ளது. தமிழர்களை இழிவுபடுத்திய தன்யா, ரஜினி படத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. பலரும் தன்யாவுக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலை தளங்களில் பதிவிடுகின்றனர். இந்த படத்தை வெளியிட தடை கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான தனது தரப்பு விளக்கத்தை தன்யா கொடுத்துள்ளார்.

தன்யா வெளியிட்ட அறிக்கை : ‛‛நான் செய்யும் தொழில் மேல் சத்தியம். அந்த கருத்து நான் கூறியது அல்ல. 12 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது. அப்போதே இதை தெளிவுப்படுத்த முயன்றேன். இப்பவும் அதைத்தான் சொல்கிறேன். ஒரு ட்ரோல் செய்யும் நபரால் அது உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவிக்கிறேன். என் சினிமா பயணம் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். அதற்காக நான் என்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல கனவிலும் நினைக்க மாட்டேன். சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.