பெங்களூரு : எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி தேர்வு செலவுக்கான தொகையை, மாணவர்களிடம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டிருப்பதை, மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமி கண்டித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி தேர்வு அட்டவணையை, கர்நாடக தேர்வு ஆணையம் நேற்று வெளியிட்டது. பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது, மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு, பள்ளிகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் தேர்வு எழுதும் மாணவர்கள், தலா 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமென ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் செயலை, முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டித்துள்ளார்.
‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், நேற்று அவர் கூறியதாவது:
மாதிரி தேர்வு செலவுக்கு தேவையான பணத்தை, மாணவர்களிடம் வசூலிக்க அரசு முற்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேர்வு செலவை அரசே ஏற்க வேண்டும்.
மக்களுக்கு ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் அளித்ததாக, பெருமை பேசும் மாநில காங்கிரஸ் அரசின் நிர்வாகம், எந்த அளவுக்கு சீர் குலைந்துள்ளது என்பதற்கு, இதுவே சாட்சி. ஒரு கையால் கொடுத்து, பத்து கைகளால் ராவணனை போன்று அரசு பறிக்கிறது.
வினாத்தாள் தயாரிப்பது, அச்சிடுவது, போக்குவரத்து செலவை, மாணவர்கள் மீதே சுமத்த கர்நாடக தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடம் பணத்தை வசூலித்து, கல்வித்துறை நிர்வாக பிரிவு இயக்குனர் கணக்கில் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. வாக்குறுதி திட்டங்களை கொடுத்து ஏழைகளை வாழ வைப்பதாக கூறும் அரசுக்கு, ஏழை மாணவர்களுக்கு 50 ரூபாய் செலவிட கதி இல்லையா?
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement