சமீபத்தில் வெளியான ‘வடக்குட்டி ராமசாமி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தானம். இதனிடையே டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்குகிறார். இனி வரும் அடுத்தடுத்த படங்களிலும் காமெடி களைகட்டும் என்கிறது அவரது வட்டாரம்.
சந்தானத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது காமெடிதான். ‘ஏ1′,’டிக்கிலோனா’ ‘தில்லுக்குதுட்டு1’, ‘தில்லுக்குதுட்டு 2’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ சமீபத்தில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ என செம ஹிட் அடித்த படங்களில் எல்லாம் காமெடியில் ஸ்கோர் செய்திருக்கும் சந்தானத்தை பார்க்கலாம். இது பற்றி சந்தானம் கூட, ”காமெடியனா இருக்கும்போது, மத்த படங்கள்ல நான் ஊறுகாய், கூட்டு, பொறியல் மாதிரி சைடு டிஷ்ஷா மட்டுமே இருந்தேன். ஆனால், ஹீரோவானதால இப்ப ஃபுல் மீல்ஸே நான்தான். அதனால, முழுக் கவனமும் என்மேல இருக்கும். முன்னாடி மாதிரின்னா ஜனங்க, ‘ஊறுகாய் நல்லா இருக்குது.. கூட்டு நல்லா இருக்குது’னு சொல்லிட்டு போயிடுவாங்க. ஆனால், இப்ப மொத்த சாப்பாடுமே நான்தான். அதனால், ஒவ்வொரு விஷயத்தையும் பாத்துப் பாத்து பண்ண வேண்டியிருக்கு.” என முகம் மலர்ந்து சொல்லும் சந்தானம், அடுத்து ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாகம் பாகத்தை கொண்டு வருகிறார்.
அன்புச்செழியன் தயாரிப்பில், ‘இந்தியா பாகிஸ்தான்’ பட இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுவும் காமெடி படமாகும். முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. டப்பிங்கையையும் நிறைவு செய்து கொடுத்துவிட்டார் சந்தானம். கோடை கொண்டாட்டமாக ஏப்ரலில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இதனை அடுத்து மே மாதத்தில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ இரண்டாம் பாகம் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். இந்த படத்தின் ஸ்பெஷல், இது பேய்ப் படம் என்றாலும் மற்ற ஹாரரில் உள்ளது போல, க்ளீஷேக்களை தூக்கி தூர எறிந்துவிட்டிருப்பார்கள். சாதாரணமான மனிதர்களிடம் பேய்கள் கேம் ஆடினால் எப்படி இருக்கும்’ என்ற ஒருவரியை கொண்டு, காமெடியாக கொண்டு போயிருப்பார்கள் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில்! முதல் பாகத்தின் இயக்குநர் பிரேமே இதனையும் இயக்குகிறார். சந்தானத்தின் நட்பு வட்டத்தில் உள்ள ஹீரோ ஒருவர் இதனை தயாரிக்கிறார். இதனை அடுத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கிறார் சந்தானம். அவரது ‘டிடி ரிட்டர்ன்ஸ் 2’வை தயாரிக்கும் ஹீரோவுடன் கைகோர்க்கிறார். இந்த படத்தை சந்தானத்திற்கு இரண்டு ஹிட்களை கொடுத்த இயக்குநரே இயக்குவார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு அனேகமாக நவம்பரில் இருக்கலாம் என்கிறார்கள்.