கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிரான தனது போராட்டத்தை குளிருக்கு மத்தியில் இரவிலும் தொடர்ந்தார். பிறகு நேற்று அதிகாலையில் அவர் நடைப்பயிற்சிக்கு சென்றார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு தனது நிதியை விடுவிக்காமல் ரூ.7 ஆயிரம் கோடி வரை நிலுவையில் வைத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார்.
“நிலுவைத் தொகையை விடுவிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். பிப்ரவரி 1-ம் தேதிதான் கடைசி நாள்” என்று அவர் மத்திய அரசுக்கு கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில் நிதி விடுவிக்கப்படாததை கண்டித்து கொல்கத்தா மைதானம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் காலையில் தனது கட்சித் தலைவர்களுடன் போராட்டம் தொடங்கினார்.
இந்நிலையில் மம்தா நேற்று முன்தினம் இரவு குளிரிலும் தனது போராட்டத்தை தொடர்ந்தார். மாநில அமைச்சர்கள் பர்கத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர். இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று அதிகாலையில் அருகில் உள்ள ரெட் ரோடு பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அடர்ந்த பனிக்கு மத்தியில் பாதுகாவலர்களுடன் நடைப்பயிற்சி சென்ற மம்தா, பிறகு அங்குள்ள கூடைப்பந்து மைதானத்துக்கு சென்றார். அங்கிருந்த வீரர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (பிப்.5) தொடங்குகிறது. இந்நிலையில் மம்தாவின் போராட்டம் 48 மணி நேரத்துக்கு இன்று காலை வரை தொடரும் என கூறப்படுகிறது.