பெங்களூரு : மனிதர்கள், விலங்குகளுக்கு இடையேயான சக வாழ்வு குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லால்பாக் பூங்காவில் ‘லன்டானா கமாரா’ என்ற களை செடியின் தண்டில் இருந்து வடிவமைக்கப்பட்ட, 60 யானை உருவங்கள் நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன.
‘லன்டானா கமாரா’ என்ற ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது அமெரிக்க வெப்ப மண்டலத்திற்கு சொந்தமானது. இந்த தாவரம், பல்வேறு வகையான சுற்றுச்சூழல் அமைப்புகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த தாவரத்தை எங்கு விதைத்தாலும், அது வேகமாக பரவிவிடும்.
இத்தகைய தாவரம், தமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியில் அதிகளவில் வளர்கிறது. இந்த தாவரத்தின் தண்டில் இருந்து ‘யானை உருவம் வடிவமைக்கப்படுகிறது. இது 150 மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
மனிதர்கள், விலங்குகள் இடையேயான சகவாழ்வு குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனம் மற்றும் தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக பெங்களூரு லால்பாக் கண்ணாடி மாளிகை, இணை இயக்குனர் அலுவலகம் வளாகத்தை சுற்றி உள்ள புல் வெளியில் இந்த யானை உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முதல் இந்த யானை உருவங்களை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். மார்ச் 3ம் தேதி வரை மக்கள் பார்வையிடலாம்.
‘தி ரியல் எலிபேன்ட் கலெக்டிவ்’ ஏற்பாடு செய்திருந்த இக்கண்காட்சியை, வனத்துறையின் முதன்மை தலைமை வனபாதுகாவலர் சுபாஷ் மல்கடே துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
வனப்பகுதியில் இந்த தாவரம் அதிகரித்து வருகிறது. இவை அகற்றப்பட வேண்டும். இந்த தாவரத்தின் தண்டில் இருந்து யானை உருவங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இது சகவாழ்வு பற்றிய விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்த உதவுகிறது.
லால்பாக் பூங்கா உட்பட விதான் சவுதா, நாடபிரபு கெம்பே கவுடா மெட்ரோ ரயில் நிலையம், மெஜஸ்டிக், கல்லுாரிகள், டெக் பூங்காக்கள், ஏரிகள் உட்பட பசுமையான பகுதிகளிலும் வைக்கப்பட்டு உள்ளன.
‘லன்டானா கமாரா’ செடியை களையெடுத்து, சிறிது நேரம் வெந்நீரில் வைக்க வேண்டும். பின், யானை உருவம் அமைத்து, மெருகூட்டப்படும். ஒரு யானை உருவத்தை வடிவமைக்க, 10 முதல் 15 நாட்கள் ஆகும். இதை வடிவமைக்க ஐந்து தொழிலாளர்கள் ஈடுபடுவர்.
இதுவரை 250க்கும் மேற்பட்ட யானை உருவங்களை, மலைவாழ் மக்கள் வடிவமைத்து உள்ளனர். இவற்றில் 100 யானை உருவங்கள், லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
லால்பாக் கண்காட்சிக்கு பின், யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக, அமெரிக்காவில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, ‘தி ரியல் எலிபேன்ட் கலெக்டிவ்’ அமைப்பினர் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்