மதுரை: டெல்லியில் பாஜக அரசைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை செல்லூரில் இன்று இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட், திமுக, காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
மத்திய பாஜக அரசு கூட்டாட்சி கோட்பாடுகளை சிதைக்கும் நோக்கத்தை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘இண்டியா கூட்டணி’ கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது. அதனையொட்டி இன்று மதுரையில் செல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சி்ஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணேசன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ வி.வேலுச்சாமி, மாவட்டச் செயலாளர்கள் எம்.எஸ்.முருகன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), முனியசாமி (மதிமுக), ரவிக்குமார் (விசிக), தி.க மாவட்டத் தலைவர் முருகானந்தம், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்டத் தலைவர் சிவபாண்டியன், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி எம்.வெங்கட்ராமன் ஆகியோர் பேசினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழு செயலாளர்கள் ஏ.பாலு, வி.கோட்டைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.