சண்டிகர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பேரணி செல்ல உள்ளதாக சுமார் 18 விவசாய சங்கங்கள் இணைந்து அறிவித்தன. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்தப் பேரணி தொடங்கும் என தகவல். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வரும் சண்டிகரில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
கடந்த 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதுமிருந்து திரண்ட விவசாயிகள் தலைநகர் டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அப்போது கொண்டு வந்த 3 சட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி – ஹரியாணா எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய அரசு அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் பிப்.13-ம் தேதி பேரணி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவித்தனர்.
அதையடுத்து சண்டிகரில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய், அர்ஜுன் முண்டா ஆகியோரும், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மானும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“எங்களது 10 அம்ச கோரிக்கைகளை சுட்டிக்காட்டி நாங்கள் பேசினோம். அதை அரசு பரிசீலிக்கும் என மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை பஞ்சாப் அரசு முன்னெடுத்தது. டெல்லி நோக்கிய எங்களது பேரணி திட்டத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதற்குள் அரசு இதற்கு தேர்வு கண்டால் சிறப்பு. பேச்சுவார்த்தை தொடர்பாக அடுத்த கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது 13-ம் தேதிக்குள் திட்டமிட வேண்டும்” என கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
“இதற்கு முன்பு டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கூட்டம் நடத்தப்படும். விவசாய சங்கங்கள் கலந்து பேசி தங்கள் முடிவை தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர்” என பேச்சுவார்த்தைக்கு பிறகு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்தார்.