சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியஉயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2022-ம் ஆண்டு ஆக.24-ம் தேதி 14-வதுஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி, அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஊதிய ஒப்பந்தமும் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதனால்15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன.
இதுதொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
அரசு போக்குவரத்துக் கழகதொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்து, 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில் பங்கேற்க நிதித்துறைச் செயலர், 8 போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் உட்பட 14 பேர் கொண்ட குழு அமைத்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.