IND vs ENG: கோலி, பும்ரா, சிராஜ், கேஎல் ராகுல் இல்லை! 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

India vs England: இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில் பிசிசிஐ இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளது. இந்த வீரர்கள் தேர்வின் போது, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி பெற்றது.  இதன் பின்பு, அஜித் அகர்கர் மைதானத்திற்கு நேரடியாக வந்து ரோஹித்சர்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தார். மேலும் மீதலுள்ள போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ அதிக கவனம் செலுத்தி வருகிறது.  முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விராட் கோலி, மீதலுள்ள போட்டிகளுக்கும் வருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று இருந்த விராட் கோலி, பிறகு தனிப்பட்ட காரணங்களால் போட்டியை விட்டு விலகினார். இந்நிலையில், தற்போது மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அதே போல தர்மசாலாவில் நடக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தை ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐயிடம் கோலி கூறியதாகவும், அவர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் பிசிசிஐ ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான அணி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே போல காயத்தால் இங்கிலாந்து தொடரில் இருந்து முற்றிலும் விலகி உள்ளார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. உலக கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் ஷமி இந்த தொடரில் பங்கேற்கவில்லை. மேலும், காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாடாத கேஎல்ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தற்போது குணமாகி வருவதால், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. முதல் டெஸ்டின் போது ஜடேஜாவிற்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது, கேஎல் ராகுல் குவாட்ரைசெப்ஸ் காயத்தால் வெளியேறினார். 

இவர்கள் இருவரும் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். 3வது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இருவரும் அணிக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.  முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சிராஜ், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.  வாஷிங்டன் சுந்தர் 4வது ஸ்பின்னராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகேஷ் குமார் அணியில் இடம் பெற்றார்.  ஆனால், அவரால் சிறப்பாக பந்துவீச முடியவில்லை.  இதன் காரணமாக 3வது டெஸ்ட் போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து சிராஜ் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.  

அதே சமயம் மூன்றாவது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை எடுத்த பும்ரா ஐசிசி புள்ளி பட்டியலில் நம்பர்.1 இடத்திற்கு முன்னேறினார். இந்த தொடர் தற்போது 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில், பும்ராவிற்கு அணி நிர்வாகம் ஓய்வு வழங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், ராஞ்சியில் நடக்கும் நான்காவது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வரும் 15ம் தேதி நடக்க விருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது, இதில் வெற்றி பெரும் அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.