`ஓரளவுக்குத்தான் நம்மால பொறுமையாக இருக்க முடியும்’ என்ற ரீதியில் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்து பொறுமையிழந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அத்தனை சர்ச்சைகளுக்கும் இடையில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாள்கள் கடந்தும் முடிவுக்கு வராத இந்த விவகாரத்தில் என்ன சிக்கல்… என்னதான் நடக்கிறது கிளாம்பாக்கத்தில்?
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் – அடிக்கல் நாட்டியது அ.தி.மு.க ஆட்சியில் என்றாலும், முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு(!) திறக்கப்பட்டது தி.மு.க ஆட்சியில்தான். நியாயமாகப் பார்த்தால் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சுமார் ரூ.393.74 கோடி செலவில் சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பேருந்துநிலையத்தை, இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்று எனக்கூறி பெருமைப் பட்டிருக்க வேண்டும். ஆனால், போதுமான அடிப்படை வசதிகளின்றி அவசர கோலத்தில் திறந்தவிட்ட கதியினால் பொல்லாத இழி சொல்லுக்கெல்லாம் ஆளாகியிருக்கிறது கிளாம்பாக்கம் பேருந்துநிலையம். சொந்தக் காசில் சூனியம் வைத்ததுபோல தி.மு.க அரசு பெரும் அவப்பெயரை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற சொலவடை கணக்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்காக இடம் தேர்வு செய்யப்பட்ட போதே நீதிமன்ற வழக்கைச் சந்தித்தது. பின்னர், அருகிலுள்ள தொல்லியல் துறை இடத்தால் சர்ச்சை எழுந்தது. அதைக்கடந்து ஒருவழியாக பேருந்துநிலையக் கட்டுமானம் தொடங்கியபோது, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் துறை இடத்தில் விதிகளை மீறி செம்மண் அள்ளப்பட்டதாக சிம்டிஏ நிர்வாகத்தின்மீது குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கட்டிமுடிக்கும் தருவாயில் சென்னை திடீர் பெருமழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெள்ளத்தில் தத்தளித்து, சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதன்பிறகு மழைநீர் வடிகால் பணிகளும் தொடங்கப்பட்டு முடிக்கப்பட, குறிக்கப்பட்ட நாளைக் கடந்து மிகவும் காலதாமதமாக கடந்த டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டது.
இணைப்பு வசதிகள் இல்லாமல் திண்டாட்டம்:
இனியாவது சர்ச்சை ஓயும் என்று நினைத்தால், அதன்பிறகுதான் சர்ச்சையே கோரதாண்டவமாடியது. தென்மாவட்டப் பேருந்துகளெல்லாம் இனி கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்கும் என போக்குவரத்துத்துறை புதிய அறிவிப்பு வெளியிட, அதுவரை கோயம்பேட்டிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவந்த தென்மாவட்ட மக்கள் செய்வதறியாது கடும் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக, பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற மக்கள் பட்டபாடு சொல்லி மாளாதவை. காரணம், பிரமாண்டமாகப் பேருந்துநிலையம் கட்டப்பட்டிருந்தாலும், அந்த பேருந்து நிலையத்தை சென்றடைவதற்குப் போதுமான போக்குவரத்து இணைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, மின்சார ரெயிலோ, மெட்ரோ ரயில் வசதிகளோ இல்லை. இந்தச் சிக்கலை சமாளிப்பதற்காக கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு விடப்பட்ட எம்டிசி பேருந்துகளின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை. பேருந்து கிடைத்தாலும், ஊருக்கு செல்பவர்கள் தங்களில் லக்கேஜ்களை கொண்டு செல்ல, நெரிசல் மிகுந்த எம்டிசி பேருந்தில் கடுமையாக சிரமங்களை சந்தித்தனர். விளைவு, பொதுமக்கள் அனைவரும் ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிகளிலும் ஆட்டோ கார்களிலும் ரூ.1000-க்கும் மேல் கட்டணச் செலவு செய்து சென்னை மாநகருக்குள்ளாகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் அடியெடுத்துவைக்கக்கூடிய சூழல் உண்டானது. ஒருவழியாக பேருந்து நிலையத்தை அடைந்த பின்னாலும், எந்தெந்த பேருந்துகள் எங்கெங்கு நிற்கும் என்ற முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் அவதியுற்றனர்.
இந்த சங்கடங்களுக்கு இடையில், மற்றுமொரு அணுகுண்டாக `இனி அத்தனை தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்பட வேண்டும்’ என போக்குவரத்துத்துறை இன்னொரு அறிவிப்பை வெளியிட விவகாரம் சூடுபிடித்தது. அரசின் அறிவிப்பை ஏற்க மறுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், `கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதுமான இடவசதி இல்லை’ எனக்கூறி அரசின் உத்தரவை மீறி பேருந்துகளை வழக்கம் போல கோயம்பேட்டிலிருந்தே இயக்கினார்கள். அரசு தரப்போ காவல்துறை உதவியுடன் ஆம்னி பேருந்துகளை மாநகருக்குள் நுழைய விடாமல் பாதிவழியிலே வழிமறித்து, கிளாம்பாக்கத்துக்கே திருப்பிவிட்டது. பின்னர் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றம் வரை சென்று பூதாகரமானது. இத்தனை களேபரங்களுக்கும் இடையில் கண்டபடி இழுத்தடிக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டது என்னவோ அப்பாவி பொதுமக்கள்தான்.
இந்த நிலையில், அடுத்த சர்ச்சையாக கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை, வார இறுதிநாள் விடுமுறையையொட்டி ஊருக்கு செல்வதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் குவிந்தனர். ஆனால், போதுமான பேருந்துகள் கிடைக்கவில்லை; பெரும்பாலான பேருந்துகள் ஏற்கெனவே புக்கிங் செய்யப்பட்டதாகவும், கூட்டம் நிரம்பி வழிந்தபடியும் இருந்ததால் பயணிகளால் இருக்கின்ற பேருந்துகளிலும் ஏறி பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல பேருந்துகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கவே, அதிருப்தி அடைந்த மக்கள் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து விடியவிடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படவே, பயணிகளை சமாதானம் செய்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதைத்தொடர்ந்து மறுநாளான சனிக்கிழமை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டும்கூட அவை போதுமானதாக இல்லை. இதனால் மீண்டும் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து, அன்றைய தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த இரண்டு நாட்களிலும் பாதிக்கப்பட்ட வெவ்வேறு பயணிகள், பல மணி நேரங்கள் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் பேருந்து நிலைய நடைபாதைகளிலேயே படுத்து உறங்கினர். குறிப்பாக, கைக் குழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பட்ட பயணிகளும் எந்தவித வசதிகளுமின்றி இரவில் படுத்து தூங்கிய காட்சிகளும், `பேருந்துநிலையத்தில் போதுமான உணவகங்கள் இல்லை; இருக்கும் சில உணவகங்களிலும் அதிகமான விலைக்கு உணவு விற்பனை செய்கிறார்கள்’ என்று புலம்பும் செய்திகளும் ஊடகங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பா.ம.க தலைவர் அன்புமணி, பா.ஜ.க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த சிஎம்டிஏ, “சனிக்கிழமை அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல் பரவிய நிலையில், மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருக்கிறது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
அந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்துகள் பற்றாக்குறை குறித்து விரிவாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட போக்குவரத்து கழகம், “10.02.2024 அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதி காலை 3.30 மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் அதிகாலை வரை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து இயக்கத்தினை சரி செய்தனர்!” எனத் தெரிவித்தது.
இந்த சர்ச்சைகளுக்கிடையே, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சி.எம்.டி.ஏ தலைவருமான பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்த அமைச்சர்கள், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு தடைகள் உடைத்தெறியபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். தற்போது 5 ஏக்கர் பரப்பளவில் 27 கோடி ரூபாய் செலவில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பஸ் பேருந்து நிறுத்தம் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும். அதன்பின்னர் அங்கிருந்தே ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்.
கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 80% சதவீதம் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர். இங்கு அரசு பேருந்துகள் குறைவாக இருக்கிறது என்னும் வதந்தியை பரப்பினால் மீண்டும் ஆம்னி பேருந்துகளுக்கு மக்கள் வருவார்கள் என நினைக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக அங்கு நடைபெறும் போராட்டம் உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது என தோன்றுகிறது. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருவதால் தான் தமிழகத்தில் போக்குவரத்து சேவை சிறப்பாக செயல்படுகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள தேவைகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும்!” எனத் தெரிவித்தனர்.
`என்னதான் அரசாங்கம் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும், புதிதாக ரயில் நிலையம் அமைக்கப்படும், முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பேருந்துநிலையம் அமைக்கப்படும்… படிப்படியாக அனைத்து தேவைகளும் சரிசெய்யப்படும்’ எனத் தீர்வு கூறிவந்தாலும், `இந்த வசதிகளையெல்லாம் ஏன் அரசு முன்கூட்டியே செய்யவில்லை? முன்கூட்டியே திட்டமிடாமல், அடிப்படை வசதிகளை செய்து தராமல் அவசர அவசரமாகப் பேருந்துநிலையத்தைத் திறந்து மக்களை அலைக்கழிப்பது ஏன்?, மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தாண்டியும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசரமாக மூடுவது ஏன்? அங்கு அப்படி என்ன மக்கள் திட்டம் வருகிறதாம்?’ என மக்கள் கேட்கும் கேள்விகளில் நியாயம் இருக்கவே செய்கின்றன.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY