திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதி, உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் புலியூர் என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீபதி (23). தமிழ்வழி கல்வியில் படித்த இவர், பின்னர் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். படிக்கும்போதே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் வெங்கட்ராமன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் ஸ்ரீபதி பங்கேற்றார். தேர்வு தேதிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால், மிகுந்த சிரமத்துடன் தேர்வில் பங்கேற்றார். இந்த நிலையில், தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில், ஸ்ரீபதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், இளம் வயதில் உயர்ந்த நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என திமுக கொண்டுவந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வானதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும், கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக்கூட மனமில்லாமல் தமிழகத்தில் வலம்வரும் சிலருக்கு, ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் சிறந்த பதில். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் ஸ்ரீபதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 6 மாத பயிற்சிக்கு பிறகு அவர் நீதிபதியாக பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.