ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் தஹக்வாடா கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் மாநில காவல் துறையினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது சுமார் 150 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர்.
2014 மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேரும் கிராமவாசி ஒருவரும் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 4 பேரை மட்டுமே உள்ளூர் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை என்ஐஏ ஏற்றுக்கொண்டு இந்த 4 பேர் மீதும் ஜகதால்பூர் என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை கடந்த 2016-ல் தொடங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கில் மகாதேவ் நாக், தயாராம் பாகெல்,மணி ராம், கவாசி ஜோகா ஆகிய 4 பேருக்கும் ஜகதால்பூர் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் 84 சாட்சிகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் பலர் பஸ்தார் பிராந்தியத்தை விட்டு வெளியேறிவிட்டதால் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விசாரணை 7 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாக என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறினார்.