தருமபுரி: தனது கடன்கள் விரைவில் அடைய வேண்டும், வரவேண்டிய தொகை விரைந்து வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் தருமபுரி பக்தர் ஒருவர் எழுதி உண்டியலில் சேர்த்த கடிதம் உண்டியல் எண்ணிக்கையின்போது தெரியவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்தக் கோயிலில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா முடிந்த பின்னர் உண்டியல்களில் பக்தர்களால் சேர்க்கப்பட்ட தொகை எண்ணப்படுவது வழக்கம்.
அண்மையில் தைப்பூசத் தேர்த் திருவிழா முடிவுற்ற நிலையில் இன்று(பிப்.4) உண்டியல்கள் தொகை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சங்கர், கோயில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் சேகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடந்தது. உண்டியல்களில் இருந்த ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 777 ரொக்கம், 4 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை கணக்கிடப்பட்டு கோயிலுக்கான வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதுதவிர, உண்டியலில் பக்தர் ஒருவர் சேர்த்திருந்த கடிதம் ஒன்றும் இருந்தது. தான் யார் என்ற விபரம் குறிப்பிடப்படாமல் இருந்த இந்த கடிதத்தில், பலருக்கு தான் தர வேண்டிய கடன் தொகையை பெயருடன் எழுதி(மொத்தம் ரூ.1 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம்), அந்தக் கடன் அனைத்தும் விரைவாக அடைய வேண்டும் என்றும், தனக்கு சிலரிடம் இருந்து வர வேண்டிய தொகையான ரூ.10 கோடியே 10 லட்சம் விரைந்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தின் இறுதியில், கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளையும் எழுதி, ‘கடன் அடைய வேண்டும் முருகா’ என்று கோரிக்கை வைத்துள்ளார். கவனம் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்ட இந்த கடிதம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.