துபாய், துபாயில் நேற்று நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”உலகிற்கு தற்போது அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசுகள் தேவை. ‘சிறிய அரசு; பெரிய நிர்வாகம்’ என்ற தாரக மந்திரத்தை, 23 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்,” என தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே, எரிசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று, ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துாமை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, இரு நாடுகளின் தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, துபாயில் நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
‘எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்’ என்ற தலைப்பில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பொது மக்களின் வாழ்வில், அரசு முடிந்தவரை தலையிட்டு ஏதாவது ஒரு வழியில் உதவ வேண்டும். நமக்கு உதவ அரசு இல்லை என்பதை மக்கள் உணரக் கூடாது. அதே சமயம், அவர்களுக்கு அரசு சார்பில் எந்தவொரு அழுத்தமும் தரக் கூடாது.
இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக, அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை அளித்ததால் தான் இது சாத்தியமானது.
துாய்மை இயக்கம், பெண் கல்வி என, அனைத்து முன்னெடுப்புகளிலும் பெரிய அளவில் பொது மக்கள் பங்களிப்பு அளித்ததால் தான், இந்த திட்டங்கள் வெற்றி அடைந்தன.
குஜராத் முதல்வர் முதல், பிரதமர் வரை என, 23 ஆண்டுகள் அரசு நிர்வாகத்தை நடத்தியுள்ளேன். அப்போது முதல், சிறிய அரசு; பெரிய நிர்வாகம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி வருகிறேன்.
என் தலைமையிலான அரசு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அரசியல் உட்பட அனைத்து நிலைகளிலும் அவர்களது முன்னேற்றத்துக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக மற்றும் நிதி உள்ளடக்கம், பா.ஜ., அரசின் முதன்மையான முன்னுரிமை. இந்தியாவில், 50 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, தற்போது வங்கிக் கணக்கு உள்ளது. தொடர்ச்சியான நடவடிக்கைகளால், நிதி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பேமென்ட் துறைகளில்,
தொடர்ச்சி 4ம் பக்கம்
திறந்து வைத்த பிரதமர் மோடி
அபுதாபியில் கட்டப்பட்ட ஹிந்து சமூகத்தின் பிரமாண்ட கோவிலான பாப்ஸ் சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஹிந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு உள்ள முதல் கற்கோவில் என்ற சிறப்பை பெற்ற இந்த கோவிலில் அவர் வழிபாடு செய்தார். நம் நாட்டில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தண்ணீரில் பிரதமர் அபிஷேகம் செய்தார். பாப்ஸ் அமைப்பின் வாயிலாக உலகளவில் உள்ள சுவாமி நாராயண் பிரிவைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட கோவில்களில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ‘குளோபல் ஆரத்தி’யில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக, இந்தக் கோவில் கட்டுவதற்கு முக்கிய பங்களித்த பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்த மோடி, கோவில் சிறப்பாக வந்துள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்தார். கோவில் வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ள கலைநயமிக்க சிற்பங்களை பிரதமர் ரசித்து பார்த்தார். அப்போது, அங்குள்ள துாண் ஒன்றில், ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என பொருள்படும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற சொற்களை பிரதமர் மோடி பொறித்தார். கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமருக்கு, பாப்ஸ் அமைப்பினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆபத்தை முன்கூட்டியே உணரும் வகையில் கோவில் முழுதும் 300க்கும் மேற்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், வெப்ப காலத்தில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாதவண்ணம், இரும்புகளை தவிர்த்து கற்களால் கட்டப்பட்டுள்ளது, இந்த கோவிலின் சிறப்பம்சமாகும்.
’10 ஒப்பந்தங்கள் கையெழுத்து’
இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் விவாதித்தனர். வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு, நிதிசார் தொழில்நுட்பம், எரிசக்தி, கட்டமைப்பு, கலாசாரம், இருநாட்டு உறவுகள் உள்ளிட்டவற்றில் இரு நாட்டு கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மின்சார இணைப்பு மற்றும் வர்த்தக துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியா- – மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் குறித்து இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகளுக்கு இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தம் டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் பாரம்பரியம், அருங்காட்சியகங்கள் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் உடனடி பணப் பரிவர்த்தனை தளங்களான யு.பி.ஐ., – ஏ.என்.ஐ., ஆகியவற்றை இணைக்கும் ஒப்பந்தம் உள்நாட்டு கடன் அட்டைகளுடன் இந்தியாவின் ரூபே அட்டையை இணைக்கும் ஒப்பந்தம் இயற்கை எரிவாயு ஒப்பந்தம் துறைமுக உள்கட்டமைப்பு ஒப்பந்தம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்