சண்டிகர், டில்லியை நோக்கி பேரணி நடத்த முயன்றுள்ள விவசாய சங்கத்தினர், பஞ்சாப் — ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கலைந்து போகச் செய்ய, இரண்டாவது நாளாக நேற்றும் கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, டில்லியில் இன்று நடக்கும் மூன்றாம் கட்ட பேச்சில் முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போராட்டம்
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
‘டில்லி சலோ’ எனப்படும் டில்லியை நோக்கி பேரணி என்ற பெயரில், பல விவசாய சங்கத்தினர் தங்கள் பயணத்தை நேற்று முன்தினம் துவக்கினர்.
போராட்டத்தை கைவிடுவதற்கு மத்திய அரசு நடத்திய பேச்சில் முடிவு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான வாகனங்களில் விவசாய சங்கத்தினர் பேரணி துவங்கியது.
பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்புவில், பேரணியை தடுத்து நிறுத்தும் வகையில், பல அடுக்கு தடுப்புகளை ஹரியானா அரசு அமைத்துள்ளது. கான்கிரீட் தடுப்புகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இந்தப் பகுதியை அடைந்த விவசாய சங்கத்தினர், அந்த தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர்.
இதையடுத்து, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன், விவசாயிகள் மோதலில் ஈடுபட்டனர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக, ஷம்பு பகுதியில் விவசாயிகள் அதிகளவில் குவியத் துவங்கினர். அவர்கள் வந்த டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் வரிசை கட்டியுள்ளன.
ஷம்பு பகுதியைத் தவிர, பஞ்சாபில் இருந்து ஹரியானா வரும் மற்ற எல்லைப் பகுதிகளிலும் இது போன்று தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் டாடா சிங்வாலா – கனோரி எல்லையிலும், விவசாயிகளின் வாகனங்கள் அதிகளவில் குவிந்துள்ளன.
மூன்றாம் சுற்று பேச்சு
ஷம்பு எல்லையில் நேற்றும் விவசாயிகள் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். இதையடுத்து, கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால், இரண்டாவது நாளாக அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, விவசாய சங்க தலைவர்கள் – மத்திய அரசு இடையே ஏற்கனவே நடந்த இரண்டு சுற்று பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இதை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியுஷ் கோயல், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர், விவசாய சங்க தலைவர்களை இன்று மாலை 5:00 மணிக்கு சந்தித்து மூன்றாம் சுற்று பேச்சு நடத்த உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பெரிய மனதுடையவர். அவர் எங்களுடைய கோரிக்கையை ஏற்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும். நாங்கள் அரசுடன் மோத வரவில்லை. எங்கள் கோரிக்கையை முன்வைக்க வந்துள்ளோம். தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தினால், பேச்சில் பங்கேற்க தயாராக உள்ளோம்.
சர்வண் சிங் பண்டேர்
விவசாய சங்கத் தலைவர்
பெரிய மனது காட்டுங்கள்!
மத்திய அரசு பேச்சுக்கு அழைத்தது, நாங்கள் அதை மறுத்துவிட்டோம் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்க மாட்டோம். உரிய முறையில் அழைத்தால், அதற்கான இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தினால், பேச்சில் பங்கேற்க தயாராக உள்ளோம்.
ஜக்ஜித் சிங் தல்லேவால்
விவசாய சங்க தலைவர்
இடம் கொடுக்க மாட்டோம்!
‘ட்ரோன்களுக்கு எதிர்ப்பு’
பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் முகாமிட்டுள்ள விவசாயிகளை கலைக்க, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பஞ்சாப் போலீசார் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அம்பாலா துணை கமிஷனருக்கு, பஞ்சாப் – பாட்டியாலா போலீஸ் துணை கமிஷனர் ஷோகத் அஹமத் எழுதியுள்ள கடிதத்தில், ‘அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், பஞ்சாப் எல்லைக்குள் தான் விவசாயிகள் உள்ளனர். ஆகையால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ட்ரோன்களை அனுப்ப வேண்டாம்’ என கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே, பறந்து வரும் ட்ரோன்களை கட்டுப்படுத்தும் வகையில், ஷம்பு எல்லையில் சரமாரியாக பட்டங்களை பறக்கவிட்டு, தங்கள் எதிர்ப்புகளை விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.
போனில் பேசிய ராகுல்!
போலீசார் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவசாயி குர்மீத் சிங்கிடம், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொலைபேசி வாயிலாக பேசினார். இதை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது:நாட்டிற்கே உணவு தரும் விவசாயிகள் மீது மோடி அரசு சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறது. நம் நாட்டின் பாதுகாவலர்களாய் விளங்கும் அவர்கள் மீதான இந்த அணுகுமுறை, ஜனநாயகத்தை அவமானப்படுத்துகிறது. நாட்டின் முக்கியமான விஷயத்திற்கு போராடும் உங்களுடன் காங்கிரஸ் இருக்கிறது; கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
‘பொதுமக்கள் தவிப்பு’
ஹரியானாவை ஒட்டிய ஷம்பு எல்லையில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கர்ப்பிணியர், நோயாளிகள், குழந்தைகள், வேலைக்கு செல்வோர் செய்வதறியாது திகைத்தனர். சிங்கு எல்லையை ஒட்டிய மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதை அடுத்து, குறைந்த அளவிலான பஸ்களே அப்பகுதிக்கு இயக்கப்பட்டன. ஆகையால், பல கிலோ மீட்டர் துாரம் கால்நடையாகவே அவர்கள் நடந்து சென்று டில்லியை அடைந்தனர். விவசாயிகள் நுழைய முடியாதபடி, சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்ததால், அவற்றை கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
‘மத்திய அமைச்சர்கள் ஆலோசனை’
விவசாயிகள் போராட்டம் வலுத்துள்ள நிலையில், தலைநகர் டில்லியில் மத்திய அமைச்சர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். முன்னாள் வேளாண் அமைச்சரும், தற்போதைய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோர் விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். ஒரு சில மூத்த அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
உழவர் உழைப்பாளர் கட்சி கருத்து!
தமிழகத்தைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நேற்று கூறியதாவது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் மாநில விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற கோரிக்கைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதை தான், மத்திய – மாநில அரசுகளிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். விளைபொருட்களுக்கு ஆதரவு விலை அளித்தால் கூடுதல் செலவாகும் என்பதால், மத்திய அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை. நெல், கோதுமைக்கு வழங்கப்படுவது போல் விளைபொருட்களுக்கு ஆதரவு விலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்