ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில்: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்

துபாய்: ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.

2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வந்துள்ளார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யுஏஇ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் பிறகு இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இந்நிலையில் நேற்று மாலை அபுதாபியில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜைகளிலும் அவர் கலந்துகொண்டார்.

துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் இந்த சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த சுவாமி நாராயண்கோயில் எழிலுற அமைந்துள்ளது. இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பயன் படுத்தப்பட்டன.

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கிய 27 ஏக்கரில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2015-ம்ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துபாய் சென்ற போது நிலத்தை தானமாக வழங்கினார் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான். இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்க முடியும்.

உச்சி மாநாடு: முன்னதாக நேற்று காலை துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “உலக நாடுகள் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அரசு திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் ஊழல் போன்ற பிரச்சினைகள் பல்வேறு நாடுகளில் ஏற்படுகின்றன.

தற்போது உலக நாடுகளுக்கு ஒரு ஸ்மார்ட் அரசு தேவை. அதாவது உலக நாடுகளுக்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்ப வசதி கொண்ட அரசு தேவை.இந்த அரசுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும். இதனால் ஊழல் முற்றிலுமாக வேரறுக்கப்படும்” என்றார்.

பாரத் மார்ட் தொடக்கம்: இதைத் தொடர்ந்து துபாய்நகரில் பாரத் மார்ட் என்ற வளாகத்திட்டத்தைத் தொடங்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இந்தத் திட்டம் 2025-ல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

துபாயில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த நடுத்தர மற்றும் சிறுதொழில்துறையினரின் ஏற்றுமதிக்கு உதவும் வகையில் பாரத் மார்ட் வளாகம் அமைக்கப்படுகிறது.

பாரத் மார்ட் வளாகம் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான சதுர மீட்டர்கள் கொண்ட பரப்பளவில் அமையவுள்ளது. இங்கு மிகப்பெரிய அளவிலான கிடங்குவசதி, சில்லறை விற்பனை வசதி, ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான வசதி, விருந்தோம்பல் வசதிகள் இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.