'டி20 உலகக் கோப்பையில் இவர் தான் கேப்டன்…' உண்மையை போட்டுடைத்த ஜெய் ஷா!

Rohit Sharma Captaincy: இந்திய கிரிக்கெட்டில் சமீப காலமாக, அது சர்வதேச கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஐபிஎல் தொடராக (IPL 2024) இருந்தாலும் சரி, ரஞ்சி டிராபி தொடராக இருந்தாலும் ‘கேப்டன்’ பதவி பஞ்சாயத்து என்பது மிகப்பெரிய விஷயமாக உருவெடுத்திருக்கிறது. 

ரஞ்சி டிராபியில் (Ranji Trphy) டெல்லியின் அணியின் கேப்டன் யாஷ் தூல் தூக்கப்பட்டது ஒரு உதராணம் என்றால், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் (Mumbai Indians) 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு தற்போது ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததை பார்க்க முடிந்தது.

ரோஹித் சர்மாவின் ரீ-என்ட்ரி

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தளவு பிரச்னை இல்லையென்றாலும், கேப்டன் பதவிகளை நோக்கி சிற்சில குழப்பங்கள் நிலவியது என்றே சொல்ல வேண்டும். இந்திய சீனியர் ஆடவர் அணிக்கு (Team India) விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மட்டில் கேப்டனாக இருந்த பின் ரோஹித் சர்மாதான் மூன்றிலும் கேப்டனாக வந்தார்.

இருப்பினும், ரோஹித்தின் தலைமையில் 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்று இந்திய அணி வெளியேறிய பின் நீண்ட காலமாக சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவே இல்லை. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்தான் ரீ-என்ட்ரி கொடுத்தார், அதுவும் கேப்டனாக – அதிரடி தொடக்க வீரராக… 

2022 டி20 உலகக் கோப்பைக்கு பின்…

2022 டி20 உலகக் கோப்பை தொடரின் தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya ) இந்திய டி20 அணிக்கு தலைமையேற்றார். குறிப்பாக, 2022ஆம் ஆண்டு அவர் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. எனவே, 2024 டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) ஹர்திக் பாண்டியாவின் தலைமையில்தான் என கூறப்பட்டு வந்தது. விராட் கோலி (Virat Kohli), கேஎல் ராகுல், பும்ரா போன்றோரும் சர்வதேச டி20 போட்டியை தொடர்ந்து விளையாடியதில்லை. 

மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதுதான் அனைத்து சூழல்களையும் மாற்றியிருக்கிறது எனலாம். இருப்பினும், ஐபிஎல் தொடரில் மும்பை அணி கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் எப்போது அவர் காயத்தில் இருந்து மீள்வார் என்ற கேள்வி இருந்தது. ஹர்திக் பாண்டியா சூர்யகுமார் யாதவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் காயத்தில் இருந்து மீண்டு வரும் சூழலில், ரோஹித், விராட்டின் டி20 ரீ-என்ட்ரி என்பது புத்துணர்ச்சியை அளித்துள்ளது. 

கேப்டன் யார்?

ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து தேறி வந்தாலும், மீண்டும் அவருக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படுமா என்றே கேள்வியும் இருந்து வந்தது. ஆனால், அந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம், ஐபிஎல் தொடருக்கு பின் ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியா – இங்கிலாந்து அணி மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி (IND vs ENG 3rd Test) நடைபற ராஜ்கோட் நகரில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் பெயரை நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானம் என பெயர் மாற்ற நிகழ்ச்சியில் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா (Jay Shah), “சமீபத்தில் அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் கேப்டனாக ஓராண்டுக்குப் பிறகு திரும்பியது என்பது, டி20 உலகக் கோப்பையிலும் அவர் கேப்டனாக செயல்பட போகிறார் என வெளிப்படையானதுதான்.

ரோஹித்திடம் (Rohit Sharma) திறமை இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் அதனை வெளிப்படுத்தினார். நாம் இறுதிப்போட்டி வரை தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றோம். 2024ஆம் ஆண்டு பார்படாஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்தியா கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார். இதன்மூலம், டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் கேப்டனாக செயல்படுவார் என்பது உறுதியாகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.