2024-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் பிப்ரவரி 12-ம் தேதி கூடியது. முதல்நாளன்று ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்து அமர்ந்தது. ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பிய நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கடன் சுமை தொடர்பான அடுக்கடுக்கான கேள்விகளும் கவனம்பெற்றுள்ளது. அதுகுறித்து விசாரித்தோம்.
தமிழ்நாடு ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “அ.தி.மு.க அரசு அதிக கடன் வாங்கியதாக குற்றம்சாட்டி ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆனால் நாங்கள் ஆட்சியை நிறைவு செய்யும்போது 5.18 லட்சம் கோடிதான் கடன். ஆனால் தி.மு.க அரசு இந்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 2.47 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. 2006-ல் அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருந்தபோது 45 ஆயிரம் கோடியாக இருந்த கடன் 2011-ல் தி.மு.க ஆட்சியை நிறைவு செய்தபோது 1 லட்சம் கோடியாக உயர்ந்தது.
பிறகு 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது அ.தி.மு.க. 2021-ல் 5.18 லட்சம் கோடி வரை கடன் தொகை இருந்தது. ஏற்கனவே இருந்த கடன் 1 லட்சம் கோடியை கழித்தால் 4.18 லட்சம் கோடி அ.தி.மு.க அரசு 10 ஆண்டுகளில் 4.18 லட்சம் கோடியை கடன் பெற்றிருந்தோம். இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 1 லட்சம் கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டது” என ஆவேமாக பேசினார் எடப்பாடி பழனிசாமி.
அதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “கடன் வாங்குவதன் மூலம் பொருளாதார எப்படி உயர்கிறது என்பது முக்கியமானது, அரசை பொருத்தவரையில் மூலதன செலவில் அது எந்த அளவுக்கு வருகிறது என்பதும், திட்டங்களுக்கு எந்த அளவுக்கு கொடுக்கிறோம் என்பதும் முக்கியம். மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு முழுமையாக செலவிட வேண்டியுள்ளது. மத்திய அரசு எந்த நிதியும் தரவில்லை. மேலும் கடன் வாங்குவது இயற்கையாக அமைந்துள்ளது. உங்கள் ஆட்சிக் காலத்தில் வாங்கியுள்ளீர்கள், எங்கள் ஆட்சிக் காலத்திலும் வாங்கியுள்ளோம்” எனப் பேசினார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் சி.டி.ஆர் நிர்மல் குமார், “தி.மு.க அரசு நிர்வாக திறனற்ற அரசு என்பதையே இது காட்டுகிறது. 90% துறைகளில் பொருளாதார பற்றாகுறை நீடிக்கிறது. பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட கொரோனா காலத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையும் இப்போதைய பற்றாக்குறையும் சம அளவில் நீடிக்கிறது. மேலும் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கக் கூடிய எந்த திட்டமும் தி.மு.க ஆட்சியில் தொடங்கவில்லை. வேலை வாய்ப்புகளும் தி.மு.க ஆட்சியில் இல்லை. அ.தி.மு.க செல்வழித்து ஆரம்பித்த திட்டங்களை திறத்து வைத்து மூன்றாண்டு ஆட்சியை முடித்திருக்கிறார்கள்” என்றார் காட்டமாக.
நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “அ.தி.மு.க ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு தி.மு.க ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு கடன் வாங்கியுள்ளது. கடனை வைத்தே ஒரு அரசு நிர்வாகத்தை குறைத்து மதிப்பிடுவதென்பது புரிதலற்றதன்மையின் வெளிப்பாடு. தி.மு.க கடன் வாங்குகிறதென எதிர்க்கட்சி தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார்,
2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எண்ணில் அடங்கா திட்டங்களை வகுத்துள்ளோம். இல்லம் தேடி கல்வி, மருத்துவம் தொடங்கி மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவிகளுக்கான ஊக்கத் தொகை என புதியத் திட்டங்கள் ஒருபக்கம் என்றால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராதபோதும் மாநில அரசு செலவிடுகிறது. இயற்கை பேரிடர்களுக்கு கூட மத்திய அரசு நிதி தரவில்லை. அதனையும் மாநில அரசே பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. கடன் பெற்றிருப்பது சுமையல்ல, அது ஒரு முதலீடு” என்கிறார் அவர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY