பெங்களூரு : ”சிவசங்கரப்பாவுக்கு வயதாகி விட்டால் இன்றைய அரசியல் புரியாது,” என, சிவாஜிநகர் காங்., – எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சிவசங்கரப்பா, சில நாட்களுக்கு முன், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, கடிதம் எழுதினார். இதில், ‘வீர சைவ லிங்காயத் சமுதாயத்துக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
‘ராஜ்யசபா, லோக்சபா தேர்தலில் லிங்காயத் சமுதாய மக்கள் தொகைக்கு தக்கபடி, சீட் கொடுக்க வேண்டும்,’ என வலியுறுத்தியிருந்தார். இது பலருக்கு கிலியை கிளப்பியுள்ளது.
இது குறித்து, விதான்சவுதா வளாகத்தில், காங்., எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத் கூறியதாவது:
சிவசங்கரப்பா வயதில் மூத்தவர். அவருக்கு 94 வயதாகிறது. அவருக்கு என்ன புரிகிறதோ, என்ன எழுதுகிறாரோ. வயது அதிகரித்ததால் ஏதேதோ பேசுகிறார். அதிக வயதானால் அரசியல் ஓய்வு பெற வேண்டும். சிவசங்கரப்பா அரசியல் ஓய்வு பெற்று, தன் குடும்பத்துடன் காலம் கழிக்க வேண்டும்.
வீரசைவ லிங்காயத் மகாசபா சார்பில், யாரும் கடிதம் எழுதவில்லை. சிவசங்கரப்பா மட்டும் எழுதியுள்ளார். இவரை பற்றி நான் என்ன கருத்து கூற முடியும். அவர் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் ஓட்டுகளால் வெற்றி பெற்றவர். இது தாவணகெரேவில் அனைவருக்கும் தெரியும்.
வயதானவர்களுக்கு பல விஷயங்கள் புரிவதில்லை. இன்றைய அரசியல் நிலவரங்கள் தெரிவது இல்லை. அந்த வயதில் உள்ளவர்களுக்கு, எங்களாலும் கடினமாக எதையும் கூற முடியாது. வயதானவர்கள் பற்றி விமர்சிப்பது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement