திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக முன்னாள் எம்.பி த.வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.15) காலமானார். அவருக்கு வயது 87.
திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் த.வேணுகோபால். வயது 87. இவரது மனைவி உத்திரம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இளம்வயதில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். காட்டாம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் 1996, 1998, 1999, 2004-ல் நடைபெற்ற தேர்தலில் திருப்பத்தூர் (தொகுதி சீரமைப்புக்கு முன்பு) மக்களவைத் தொகுதியில் இருந்தும், 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி (திமுக சார்பில் போட்டியிட்டு) பெற்று தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
8 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினர், 18 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து திமுகவில் வரலாற்று சாதனை படைத்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக பதவி வகித்து வந்தார். வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், கட்சி பணியில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமாக பழகி வந்தார். இவருக்கு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலை மாவட்ட வன்னியர் குல சத்திரிய வள்ளலாள மகாராஜ மடாலய சங்கத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த த.வேணுகோபாலின் உடல்நிலை கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனை உணர்ந்த த.வேணுகோபால், தன்னுடைய உயிர், தான் வாழ்ந்த வீட்டில் இருந்து பிரிய வேண்டும் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து நேற்று (பிப்.14) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சொந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். அவரது நாடித் துடிப்பு மெல்ல மெல்ல குறைந்து, இன்று பிற்பகல் 2.25 மணியளவில் உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு, அவருடைய சொந்த இடத்தில் நாளை (16-ம் தேதி) பிற்பகலில் நடைபெற உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் த.வேணுகோபால் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.