பள்ளிகளுக்கு தளவாடப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு: 9 பேர் மீது வழக்குப் பதிவு @ திருச்சி

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு தளவாடப் பொருட்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, தொடக்க கல்வித் துறை துணை இயக்குநர் உள்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வாங்குவது வழக்கம்.

இதுபோன்ற சமயங்களில் இதற்கான நிதியை பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுவுக்கு விடுவித்து, மத்திய அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 2019-2020 கல்வியாண்டில், திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட சில பள்ளிகளில், மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அறிவியல் ஆய்வக உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்கள் வாங்கியதிலும், முறைகேடு நடந்திருப்பதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட போலீஸார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளில் தலா ரூ. 8 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கியதிலும், 13 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனடிப்படையில், ஆய்வாளர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அப்போதையை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் என 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களாக இருந்த, அறிவழகன், சாந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, காணக்கினியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஊனையூர் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சற்குணன், இனாம்குளத்தூர் பள்ளி தலைமையாசிரியர் எல்.கே.அகிலா, துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியரும், உதவி ஆசிரியருமான டி.டெய்சிராணி, வேம்பனூர் பள்ளி தலைமையாசிரியர் ஜெ.ஜெய்சிங், அழககவுண்டன்பட்டி பள்ளி தலைமையாசிரியர் எஸ்.கண்ணன் ஆகியோர் அடங்குவர்.

இதில், சாந்தி தொடக்கல்வித்துறை இணை இயக்குநராகவும், அறிவழகன் விழுப்புரம் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.