ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும்
அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் மூலம் முதல் நாளில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது.
முன்னதாக இப்போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான், ரோகித் சர்மா அவுட்டானதும் களமிறங்கி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். வெறும் 48 பந்துகளில் சதமடித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 62 (66) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 99 ரன்களில் இருந்தார்.
அந்த நேரத்தில் 82-வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அருகிலேயே அடித்து விட்டு சிங்கிள் எடுப்பதற்காக கீரிசை சில அடிகள் வெளியே வந்தார். அப்போது ஜடேஜாவின் 100 ரன்னை முழுமையாக்கி சதத்தை தொட வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சர்பராஸ் கான் எதிர்புறமிருந்து சிங்கிள் எடுக்க வெளியே வந்தார். ஆனால் அதற்குள் இங்கிலாந்து பீல்டர் பந்தை எடுத்ததை பார்த்த ஜடேஜா மீண்டும் கிரீசுக்கு சென்றார்.
ஆனால் மறுமுனையில் வெளியே வந்த சர்பராஸ் மீண்டும் கிரீசுக்குள் செல்வதற்குள் இங்கிலாந்து அணியினர் ரன் அவுட் செய்தார்கள். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜாவின் தவறான கணிப்பால் முதல் போட்டியிலேயே சர்பராஸ் கான் ரன் அவுட்டில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக ஜடேஜா, தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னுடைய தவறான அழைப்பால் அவுட் ஆனதற்கு வருந்துகிறேன். சிறப்பாக விளையாடினீர்கள் சர்பராஸ் கான்” என பதிவிட்டுள்ளார்.