புதுடெல்லி: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை, வரவிருக்கும் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி சொந்த பலத்தில் தனித்துப் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் இருவேறு கருத்துகள் கிடையாது” என்றார்.
பாஜக தலைமையில் மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்து வருகிறார். இதை முறியடிக்க, 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ எனும் பெயரில் கூட்டணியை அமைத்தனர். ஆனால் இண்டியா கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும் வகையில், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அதோடு, இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் என்டிஏவில் இணைந்திருப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் இண்டியா கூட்டணிக்கு விழுந்திருக்கும் பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் அறிவிப்பும், இண்டியா கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.