அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுவரை விற்பனை செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்த முழு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1,000-ல் தொடங்கி, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக, ஒரு மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே பத்திரங்கள் விற்கப்பட்டன.

தேர்தல் காலத்தில் மட்டும் மாதம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. தனிநபர், நிறுவனம் என யார் வேண்டுமானாலும் இதை வாங்கி, தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இதை பெறும் கட்சிகள், 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

6 ஆண்டுகளாக விசாரணை: இதற்கிடையே, தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே, அதை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்), காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெயா தாக்குர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ல் வழக்கு தொடரப்பட்டது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து வந்தது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண், சாதன், நிஜாம் பாஷா, விஜய் ஹன்சாரியா, சஞ்சய் ஹெக்டே ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர்.

‘தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. மோசடி நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துகட்சிகளுக்கு நன்கொடை அளித்து, தேவையான பலன்களை அடையும்’ என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மத்திய அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில், ‘ஆளும்கட்சிக்கு தாங்கள் அளிக்கும் நன்கொடை, எதிர்க்கட்சிக்கு தெரிய கூடாது என்று பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன. ஒருவேளை எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக நிறுவனங்கள் அஞ்சுகின்றன. இதனாலேயே, நன்கொடையாளரின் அடையாளம் தெரியாத வகையில் தேர்தல் பத்திரம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் எவ்வித விதிமீறலும் இல்லை’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

சட்டவிரோதமான திட்டம்: இரு தரப்பு வாதங்கள் கடந்த ஆண்டுநவம்பரில் நிறைவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தலைமைநீதிபதி சந்திரசூட் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள் உரிமை சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், வருமான வரிசட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல்பத்திரம் திட்டம் உள்ளது. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. சட்டவிரோதமான இத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திரம் விற்பனையை ஸ்டேட் வங்கி உடனே நிறுத்த வேண்டும்.அரசியல் கட்சிகள் மாற்றாமல் வைத்துள்ள பத்திரங்களை உடனே திரும்பஒப்படைக்க வேண்டும். அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட நன்கொடையாளரின் வங்கிக் கணக்கில் ஸ்டேட் வங்கி செலுத்த வேண்டும்.

கடந்த 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஏடிஆர் காமன் காஸ் தொண்டு நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

‘நன்கொடையை பணமாக அளிக்க கூடாது. ஒரு நிறுவனத்தின் 3 ஆண்டுலாபத்தில் 7.5 சதவீதத்துக்கு உட்பட்டேகட்சிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும்’ என்பது உட்பட இத்திட்டத்துக்கு சிலகட்டுப்பாடுகள் இருந்தன. கடந்த 2017-ல்இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. கட்சிகளுக்கு ஒரு நிறுவனம் எவ்வளவுவேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், எங்கள் வாதத்தை ஏற்று, தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த 2019 ஏப்ரல் முதல் எந்த கட்சிக்கு, யார், எவ்வளவு நன்கொடை அளித்துள்ளனர் என்பன உள்ளிட்ட உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.