தோஹா:’இந்தியா – கத்தார் இடையேயான உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளும் ஒத்துழைப்பை எதிர்நோக்குகின்றன’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்த பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் இரவு கத்தாருக்கு சென்றார்.
கத்தார் வெளியுறவு துறை அமைச்சரும், பிரதமருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானியை சந்தித்த அவர், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து பேசினார்.
இதையடுத்து, கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தார்.
இந்நிலையில் நேற்று, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியை, பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, விண்வெளி, முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் ஆலோசித்தனர்.
தொடர்ந்து, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி அளித்த மதிய உணவு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த சந்திப்பு குறித்து, சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி உடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது.
‘பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தோம். உலகிற்கு பயனளிக்கும் சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகள் ஒத்துழைப்பை எதிர்நோக்குகின்றன’ என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில், கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நேரத்தில் பிரதமர் மோடி கத்தாருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
மன்னருக்கு மோடி அழைப்பு
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி – பிரதமர் மோடி சந்திப்பு குறித்து, நம் வெளியுறவு செயலர் வினய் குவாத்ரா கூறியதாவது:கத்தாரில் உள்ள இந்தியர்களின் நலனுக்காக அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேரை விடுதலை செய்ததற்கு, மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கு வருகை தரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார். எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, இரு நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்