ஜடேஜா செய்த டாப் கிளாஸ் சாதனைகள்… கபில்தேவ், அஸ்வின் பட்டியலில் சேர்ந்த ஜட்டு..!

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது சொந்த மைதானமான ராஜ்கோட்டில் சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ஜடேஜாவின் சொந்த ஊர் மைதானமான ராஜ்கோட்டில் தான் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தபோது களம் புகுந்த அவர், ரோகித் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது சதமடித்த அவர், முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழக்காமல் 110 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 9 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களும் அடங்கும்.  

அத்துடன் பல்வேறு பெரிய சாதனைகளையும் ஜடேஜா படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 200 விக்கெட்டுகளை எடுத்ததுடன், மூவாயிரம் ரன்களை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் ஜடேஜா. இவருக்கு முன், முன்னாள் கேப்டன் கபில்தேவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இதைச் செய்துள்ளனர். கபில்தேவ் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 5248 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அஸ்வினை பொறுத்தவரையில் 3271 ரன்கள் எடுத்ததோடு 499 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 3003 ரன்களும் 280 விக்கெட்களும் இதுவரை எடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது சதமடித்திருக்கும் அவர், ஜூலை 1, 2022 -க்குப் பிறகு அடித்த முதல் சதம் இதுவாகும். அதேபோல், ராஜ்கோட்டில் ஜடேஜா ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018 அக்டோபரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்திருந்தார்.

ராஜ்கோட் மைதானத்தில் சாதனை

ராஜ்கோட்டில் நடந்த முதல் தர கிரிக்கெட்டில் ஜடேஜா பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார். இந்த மைதானத்தில் 12வது போட்டியில் விளையாடும் அவர் தனது ஆறாவது சதத்தை அடித்துள்ளார். ஜடேஜா 17 இன்னிங்ஸ்களில் 1564 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவரது சராசரி 142.18 ஆக இருந்தது. ஜடேஜா 6 சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். இந்த மைதானத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 331 ரன்கள்.

ரோகித் சர்மா சிறப்பான பேட்டிங்

ராஜ்கோட்டில் தொடங்கிய மூனாறவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் 10 ரன்களிலும், ரஜத் படிதார் 5 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி பரிதாபமான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது களம் புகுந்த ஜடேஜா கேப்டன் ரோகித் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.