கடந்த சில தினங்களாக ஐ.டி.சி நிறுவனத்தின் பங்குகள் (ITC share) பங்குச் சந்தையில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் ராஞ்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கோடிக்கணக்கில் ஐ.டி.சி பங்குகள் கிடைத்த சம்பவம் பங்குதாரர்களை ஈர்த்துள்ளது.
ராஞ்சியின் ஹதியா பகுதியை சேர்ந்த உஷா ஷர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஐ.டி.சி பங்குகளுக்கு தற்போது சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 1970-ல் உஷாவின் தந்தை, ஐ.டி.சி-யில் 420 பங்குகளை வாங்கி இருக்கிறார். தந்தையின் மறைவுக்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து தந்தை வைத்திருந்த ஐ.டிசி பங்கு சார்ந்த விவரங்கள் உஷா ஷர்மாவுக்கு தெரியவர, அது பற்றி மேலும் ஆராய்ந்ததில் ஐ.டி.சி நிறுவனம் மேற்கொண்ட போனஸ் மற்றும் பங்கு பிரிப்பு போன்றவற்றினால் 420 பங்கு 1,73,880 பங்குகளாக மாறிய விவரம் தெரியவந்திருக்கிறது. இதனுடைய தற்போதைய மதிப்பு ரூ.6 கோடிக்கும் மேல் என்கிற விவரமும் தெரிய வர, அந்த நிறுவனத்திடம் உஷா ஷர்மா கோரிக்கை வைத்திருக்கிறார்.
இருப்பினும், இந்த செல்வத்தை உரிமை கொண்டாடுவது உஷா ஷர்மாவுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. பங்குகள் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்ததால், பங்குகளை உஷா ஷர்மாவின் பெயருக்கு மாற்ற, நீதிமன்றத்தில் இருந்து வாரிசுச் சான்றிதழைப் பெற வேண்டும்.
ராஞ்சியில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஹரித்வாரில் உள்ள நீதிமன்றத்தில் வாரிசு சான்பிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனால் வாரிசு சான்றிதழை பெற பலமுறை முயன்றும் நிராகரிக்கப்பட்டது. நிறைய ஆவணங்கள் தேவைப்பட்டன. அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், பங்கு பரிமாற்றத்துக்குத் தேவையான ஆவணங்களை ஐ.டி.சி பெறுவதற்கும் அவர் நிறைய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், உஷா அதிக நிராகரிப்புகளை மட்டுமே சந்தித்தார்.
உஷாவின் மகன் சஞ்சய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றப்பட்டிருந்த பங்கை வாரிசுச் சான்றிதழ் வாங்கி கொடுத்து ஐ.டிசி நிறுவனத்திடம் சமர்பிக்க, மீண்டும் ஐ.டி.சி நிறுவனம் பங்கு உரிமைக்கான கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. ஆனால் உஷா ஷர்மா விடுவதாக இல்லை. 5 மாத தொடர் போராட்டத்துக்கு பிறகு, ஐ.டி.சி நிறுவனம் உஷாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. 1,73,880 ஐ.டி.சி பங்குகளை (ITC share) உஷாவின் தந்தையின் பெயரிலிருந்து உஷா சர்மாவின் பெயருக்கு மாற்றியது. இப்போது உஷா ஷர்மா ஒரு கோடீஸ்வரர். ஒரு சிறிய கிராமப்புற முதலீட்டாளருக்கு கிடைத்த வெற்றி இது.