இந்திய மின்சார வாகன உற்பத்தியாளர் ஒடிஸி, எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பிரபலமான மாடல்களின் பேட்டரிகளுக்கு வாரண்டி நீட்டிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் 1, 2024 முதல் ஒடிஸி மின்சார வாகனங்களில் குறிப்பிட்ட மாடல்களை வாங்கும் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட பேட்டரி வாரண்டி உத்தரவாதத்தைப் பெறலாம்.
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தின் விதிமுறைகளின்படி, பேட்டரி உத்தரவாதத்தை மொத்தம் 5 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ள முடியும். இது பேட்டரிக்கு மட்டுமே என தெரிவித்துள்ள ஒடிஸி நிறுவனம், மின்சார வாகன வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. பேட்டரி வாரண்டி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டம் ஒடிஸியின் Ecokis, e2Go+, e2Go Lite, Hawk Plus, Hawk Lite, Racer Lite, V2+/V2 மற்றும் Vader மாடல்களுக்கு பொருந்தும்.
ஒடிஸி பேட்டரி வாரண்டி சிறப்பம்சங்கள்
வாகனம் வாங்கிய 365 நாட்களுக்குள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தை வாங்கலாம். பேட்டரி ஆரோக்கியம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பேட்டரி சார்ஜ்களுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் நிறுவனத்தின் உதவியை பெற்றுக் கொள்ளலாம். ஒடிஸி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் இந்த சேவை கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள ஒடிஸி அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதத் திட்டம் கிடைக்கும். இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதக் கவரேஜ் கொடுக்க ஒடிஸி முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறது ஒடிஸி.
ஒடிஸியின் CEO என்ன சொன்னார்?
இது குறித்து பேசிய ஒடிஸி எலக்ட்ரிக் வாகனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி நெமின் வோரா, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கும் ஒடிஸியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என்றார். இந்த முன்முயற்சியின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் மின் வாகனங்களை பேட்டரி சேதமடையும் என்ற அச்சமின்றி பயன்படுத்தலாம்.