பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மனைவியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஜெயா பச்சன் (75) 2004-ல் சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். அதிலிருந்து தொடர்ந்து 4-வது முறையாக அப்பதவியில் நீடிக்கிறார். வரும் ஏப்ரலில் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், 5-வது முறையாக அவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 13-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தனக்கும் தனது கணவருக்கும் மொத்தம் ரூ.1,578 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக ஜெயா பச்சன் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் ரூ.40.97 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.9.82 லட்சம் மதிப்பிலான கார் இருப்பதாகவும் தனது கணவரிடம் ரூ.54.77 கோடி மதிப்பிலான நகைகள் ரூ.17.66 கோடி மதிப்பிலான 16 வாகனங்கள் (2 மெர்சிடிஸ், 1 ரேஞ்ச் ரோவர் உட்பட) இருப்பதாகவும் ஜெயா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப் – ஜெயா தம்பதிக்கு சொந்தமாக ரூ.849.11 கோடிக்கு அசையும் சொத்தும் ரூ.729.77 கோடிக்கு அசையா சொத்தும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாதி சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜி லால் சுமன் (73) மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன் ஆகியோரும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ராம்ஜி லால் சுமன், தனக்கு ரூ.1.85 கோடி மதிப்பிலான அசையா சொத்தும் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகையும் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உ.பி.யின் முன்னாள் தலைமைச் செயலாளரான அலோக் ரஞ்சன், சமாஜ்வாதி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெறுகிறார். இவர் தனக்கும் தனது மனவி சுரபி ரஞ்சனுக்கும் ஒட்டு மொத்தமாக ரூ.12.39 கோடி சொத்து இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.