2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) திட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. இதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர் எனப் பலரும் தங்களை பற்றிய தகவல்களை குறிப்பிடாமலே, எளிதாக அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடிந்தது. ஆனால், இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் சட்டத்துக்கு முரணானது. தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (a)-க்கு எதிரானது. எனவே இந்த சட்டம் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “முதலில் நாங்கள் வழங்கும் காசோலைகளை வங்கிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்தபோதுதான், இந்தியத் தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் 4 வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி, முடக்கம் செய்திருக்கிறது. அதற்கு அபராதமாக காங்கிரஸ் கட்சி ரூ.210 கோடி செலுத்த வேண்டும் எனவும் கேட்டிருக்கிறது. தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அவர்கள் முக்கிய எதிர்க்கட்சியின் கணக்கை முடக்கியுள்ளனர். இப்போது எங்களிடம் மின் கட்டணம் செலுத்தவோ, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ கூட பணம் இல்லை.
இதனால், பாரத் ஜோடோ நியாய யாத்ரா மட்டுமல்ல, அனைத்து அரசியல் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல். வேண்டுமென்றே கட்சியின் தேர்தல் ஆயத்தங்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவே கருதுகிறோம். இதன் மூலம் ஜனநாயகம் முடக்கப்படுகிறது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தை (ITAT) காங்கிரஸ் கட்சி அணுகியிருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY