நெல்லையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கிய 7வது பொருநை புத்தகத் திருவிழா, பிப்ரவரி 14ஆம் தேதி நிறைவு பெற்றது.
இதில், ரூ. 1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், இளம் தலைமுறையினர் தமிழ் இலக்கியம், பண்பாடு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சபாநாயகர் மு. அப்பாவு இவ்விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றியிருந்தார்.
இதையடுத்து நாள்தோறும் புத்தக வெளியீடுகள், எழுத்தாளர்களின் சிறப்புரைகள், பட்டிமன்றங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் எனப் புத்தகத் திருவிழா அரங்கே களைகட்டியிருந்தது. பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்த இந்த புத்தகத் திருவிழா, பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களின் கோரிக்கையின் காரணமாக பிப்ரவரி 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நிறைவு விழாவில், வள்ளியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட நரிக்குறவர் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதேபோல, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவ, மாணவியர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள் கண்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தது. மேலும், மெளன நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் வாழ்த்துரை வழங்கிப் பேசிய எழுத்தாளர் நாறும்பூ நாதன், “நடந்து முடிந்த பொருநை புத்தகத் திருவிழா, உண்மையிலேயே ஒரு திருவிழாவாகத்தான் நடைபெற்று முடிந்துள்ளது. கோவை, மதுரையைத் தொடர்ந்து முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் இத்திருவிழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பேராசிரியர் லியோனி, காலை என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, 71 எழுத்தாளர்கள் சேர்ந்து 800 பக்கங்களுக்கு எழுதிய ‘விநோத நடனங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பையும், ‘நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டு சிறுகதைகள்’ என்ற நூலையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்தளவுக்குப் பொருநை புத்தகக் திருவிழாவின் சிறப்பு தமிழகம் முழுவதும் பரவியுள்ளது” என்று கூறினார்.
‘பபாசி’ நிர்வாகிகள் புத்தகத் திருவிழா குறித்து கூறுகையில், “பொருநை புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு, இந்த 12 நாள்களில் சுமார் 7 லட்சம் புத்தகங்கள், சுமார் ரூ. 1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. 7 ஆண்டுகளுக்கு முன் முதல் புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டபோது வெறும் 70 அரங்குகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அது இரட்டிப்பு அடைந்திருப்பது மக்களின் வாசிப்பு பழக்கம் மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதற்காக நெல்லை மக்களுக்கு ‘பபாசி’ சார்பில் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்.
நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், “பொருநை புத்தகத் திருவிழாவுக்கு அரசாணை வெளியிட்டு, சிறப்பு நிதி ஒதுக்கி, உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும், அமைச்சர்கள், பொது நூலகத் துறை உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
லட்சக்கணக்கானோர் பங்கேற்ற விழாவைத் தூய்மையாகப் பராமரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இவ்விழாவை ஒருங்கிணைத்து வெற்றி பெறச் செய்த அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21 பேர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளனர். அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களின் புகைப்பட பதாகைகளைப் புத்தக அரங்குக்குள் நுழையும் இடத்தில் வரிசையாக வைத்து, அதற்கு புகழ்வழிப் பாதை எனப் பெயரிட்டு, அதன் வழியே அனைவரையும் சென்று வருமாறு திட்டமிட்டிருந்தது சிறப்பு மிக்கதாகும்.
இப்புத்தகத் திருவிழாவில் புகழ்வழிப் பாதை வழியாகச் சென்ற அனைவருக்கும், தாங்களும் ஓர் எழுத்தாளராக வரவேண்டுமென்ற உந்துதலை இது ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த பொருநை புத்தகத் திருவிழாவுக்காக சுமார் 6 மாத காலமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டோம். அதற்குச் சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது. இப்புத்தகத் திருவிழா எழுத்து ஆர்வலர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஓர் பாலமாகச் செயல்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். இனிவரும் ஆண்டில் இதைவிடச் சிறப்பாக புத்தகத் திருவிழாவை நடத்தவேண்டுமென்ற உத்வேகத்தை இது எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
மேலும், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி, புத்தகத்தின் மீதான காதலால் இங்கு வந்துள்ள அனைவருக்கும் ‘புத்தக காதலர் தின’ வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் வாழ்த்துத் தெரிவித்தது விழாவில் முத்தாய்ப்பாக அமைந்தது.
நிறைவு விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, திட்ட இயக்குநர் சுரேஷ், பாலாஜி பதிப்பக உரிமையாளர் பாலாஜி, மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் நாறும்பூ நாதன், பேராசிரியர் செளந்தரமகாதேவன், கவிஞர்கள் கிருஷி, கணபதி சுப்பிரமணியன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.