புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாகவும், அதன்மூலம் டெல்லி அரசை கவிழ்க்க வாய்ப்புள்ளதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், கேஜ்ரிவால் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்தார். அதன்படி, டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது சனிக்கிழமை விவாதம் நடைபெற உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துவிட்டு, அரவிந்த் கேஜ்ரிவால் பேசும்போது, “பொய் வழக்குகள் பதிவு செய்து மற்ற மாநிலங்களில் கட்சிகள் உடைவதையும், அரசுகள் கவிழ்வதையும் பார்க்கிறோம். அதுபோன்று, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள்.
டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்ததால், டெல்லி அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த, நான் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஹேமந்த் சோரன் போலவே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் அமலாக்கத் துறையின் சம்மன்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். டெல்லி மதுபான கொள்கை வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி, ஆறு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சட்டவிரோதமாக சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறி அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு இதுவரை ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “பாஜக எங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைவர். நான் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறேன். இந்த நிலைப்பாட்டை கைவிட மாட்டேன். நான் பாஜகவில் இணைய வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், நான் ஒரு போதும் சேரமாட்டேன் என கூறிவிட்டேன்.
நான் எதற்கு பாஜகவில் இணைய வேண்டும்? நீங்கள் பாஜகவுக்கு சென்றால், நீங்கள் செய்த குற்றங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். நாங்கள் என்ன தவறு செய்தோம்? நாங்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுகிறோம். சாலைகள் போடுகிறோம். கழிவுநீர் கால்வாய்களை சரி செய்கிறோம். இது குற்றமா?” என்று கேஜ்ரிவால் சமீபத்தில் பேசியிருந்ததும் கவனிக்கத்தக்கது.