புறா பந்தயத்தைப் பின்னணியாக வைத்து தனுஷின் ‘மாரி’ படம் வெளியானதைப் போல, இப்போது புதுமுகங்களின் நடிப்பில் ‘பைரி’ என்ற படம் வெளியாக உள்ளது. படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி, ‘நாளைய இயக்குநர் சீஸன் 5’ இல் பங்கேற்றவர். குறும்படமாக இருந்த ‘பைரி’ அதே பெயரில் இப்போது படமாகியுள்ளது. புறாக்கள், புறா பந்தயம் குறித்த ஆச்சரியமான தகவல்களைப் பகிர்கிறார் ஜான் கிளாடி.
”ஒரு அம்மாவுக்கும் பையனுக்கும் இடையேயான பாசப் போராட்டங்கள்தான் படத்தின் கதை. பந்தயப் புறா வளர்ப்பின் பின்னணியில் ஆக்ஷனும் எமோஷனுமாக சொல்லியிருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கவே பல கிராமங்களில் தொன்றுத் தொட்டே பந்தயப் புறாக்களை வளர்க்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள். அதுல அறுகுவிளை கிராமத்தில், அதிகமான புறாக்கள் உண்டு. கதைப்படி, தலைமுறை தலைமுறையா புறா வளர்ப்பினால், தங்கள் குடும்பத்தில் பாதிப்பு ஏற்பட்டவே, தன் பையனாவது அதில் ஈடுபடாமல் நல்ல வேலைக்கு போகணும்னு நினைக்கிறாங்க அம்மா. அந்த அம்மாவின் கனவு பலித்ததா என்பதே படம். புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம்தான் ‘பைரி’னு சொல்வார்கள்.
பொதுவாகவே பந்தயப் புறாவைப் பொறுத்தவரைத் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமே பெரியளவில் வளர்க்கிறார்கள். சென்னையில் பந்தய புறாக்களுக்கான கிளப்புகள் நிறைய இருக்கு. ‘ஹோமர்’ பந்தயம்னு சொல்வார்கள். கிளப்பில் உள்ள உறுப்பினர்கள், பந்தய தினத்தன்று புறாக்களைக் கிளப்புக்குக் கொண்டு வந்திடுவாங்க. அங்கே புறாக்களுக்கு டேக் போட்டு, நம்பர் கொடுத்துடுவாங்க. 100 கிலோ மீட்டர், 200 கிலோ மீட்டர், 1000 கிலோ மீட்டர் தூரம்னு புறாவைப் பறக்க விடுவார்கள். எந்த புறா வீடு வந்து சேருகிறதோ, அதனை ஜெயிச்சதா அறிவிப்பார்கள்.
சென்னையில் இன்னொரு புறா பந்தயமும் பிரபலம். ‘மாரி’ படத்தில் பார்த்திருப்போம். கரண புறா பந்தயம். அந்த புறா பல்டி அடிக்கும். அந்த புறா எத்தனை பல்டி அடித்தது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதா புறா அல்லது வளர்ப்பு புறா பந்தயம் இப்ப பிரபலமாகிடுச்சு. டிப்ளர் ரேஸ்னு சொல்வார்கள். இந்த பந்தயத்தில், போட்டியின் நடுவர்கள் அதிகாலை ஆறு மணிக்கே நாம புறா வளர்க்கிற இடத்துக்கு வந்திடுவாங்க. அந்த புறா காலில் சீல் அடித்து (முத்திரை) பறக்க விடுவார்கள்.
அப்படிப் பறக்க விடும் புறாக்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. எத்தனை மணி நேர பந்தயமென்றாலும் ஒவ்வொரு 20 நிமிஷத்துக்குள்ளும் அந்த புறா, தன்னுடைய கூட்டுக்கு மேல் பறந்து போயிருக்கவேண்டும். அதை ரெஃப்ரிக்கிட்ட, நம்மளோட புறாதான் என்பதை காண்பிச்சிடணும். காலையில் அல்லது மாலையில் இருட்டினதுக்குப் பிறகு புறாவைப் பறக்க விடுவார்கள். ஒவ்வொரு 20 நிமிஷத்துக்கு பிறகும், புறாவைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். எவ்வளவு மணி நேரம் அது அதிகமா பறக்கிறது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள். குறைந்த பட்சம் 20 மணி நேரம் பறந்தால் தான் அது வின்னிங் ஏரியாவிலேயே கால்பதிக்க முடியும். இந்த டிப்ளர் ரேஸைதான் எங்க ‘பைரி’யில வைத்திருக்கிறோம்.
‘நாளைய இயக்குநர்’ சீஸன் 5ல நான் கலந்துகிட்ட போது, ஆக்ஷன் ரவுண்ட்ல ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ஒரு டாஸ்க் கொடுத்துட்டாங்க. உடனே எனக்கு தோன்றிய ஒரு விஷயம் கன்னியாகுமரிக்கு பக்கத்தில் உள்ள அறுகுவிளை கிராமத்தில் பந்தய புறா வளர்ப்பினால், ஒரு பெரிய சம்பவம் என் நினைவுக்கு வந்தது.
அங்கே நடந்த பந்தயப் புறா பின்னணியில் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தையும் சேர்த்து சொல்லலாம்னு இந்த கதை எழுதினேன். குறும்படத்தின் போது, இந்தப் படத்தோட ஹீரோ சையத் மஜீத் அறிமுகம் கிடைத்தது. வேற ஒரு இயக்குநரின் படத்துல அவர் நடித்திருந்தார். என்னுடைய ‘பைரி’ குறும்படம் அவருக்கு பிடித்திருந்தது. அந்த கதையின் மீதிருந்த நம்பிக்கையால், குறும்படத்தைப் பெரிய படமா பண்ணலாம்னு அவரும் விரும்பினார். நாங்கள் சேர்ந்தே, தயாரிப்பாளர்கள் தேடினோம். இப்ப படமாகவும் கொண்டு வந்துட்டோம். ஹீரோவா அவர் நடித்திருக்கிறார். ஹீரோயின் மேக்னா எலன், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன்னு நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். நிஜ பந்தயப் புறா வளர்க்கிற ஆட்களும் இதில் நடிகர்களா அறிமுகம் ஆகிறார்கள். இப்ப வெளியீட்டுக்கும் ரெடியாகிட்டோம்” என்கிறார் இயக்குநர் ஜான் கிளாடி.