பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் ஒரு பகுதியாகவழக்கறிஞர்களுடன் நேற்று சென்னையில் கலந்துரையாடல் நடந்தது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் உட்பட 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அப்போது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கே.அண்ணாமலை கூறியதாவது: டெல்லியில் 2 நாட்கள் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சுமார் 11 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். 17-ம் தேதி இந்த கூட்டத்தை ஜெ.பி.நட்டா தொடங்கி வைக்கிறார். 18-ம் தேதி மாலை பிரதமர் மோடி அந்த கூட்டத்தை முடித்து வைக்கிறார்.
முறையான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். பாஜகவுக்கு 52 சதவீதமும், காங்கிரஸ் 62 சதவீதமும், திமுக 91 சதவீதம், பிஜெடி 89 சதவீதம், டிஆர்எஸ் 80 சதவீதம், ஒய்எஸ்ஆர்சி 72 சதவீதம் என கட்சிகளுக்கு தேர்தல் நிதி, தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடையாக வருகிறது. தவறை சரி செய்யத்தான் 2018-ல் அருண் ஜெட்லி தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வந்தார். பாஜகவுக்கு 48 சதவீத பணம் பத்திரம் இல்லாமல் வந்திருக்கிறது.
நடைபயணம் நிறைவு விழாவுக்கு பிரதமர் பல்லடம் வருவது உறுதி. இன்னும் 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்படும். தமிழகம் திமுகவால் தேய்கிறது. ஒரு குடும்பத்தால் தமிழகம் அழிகிறது. தமிழகம் வளரவேண்டுமென்றால், திமுகவை அப்புறப்படுத்த வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி மத்திய அரசு, தமிழகத்துக்கு கொடுக்கவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் சொல்வாரா. அவருக்கு சவால் விடுகிறேன். 2026-ல்மாற்றுத்திறனாளிகளை தமிழகத்தின் முதல் குடிமகனாக அறிவித்து பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.