Gold Loan: பல பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்க நகை அடமானக் கடனுக்கு (Gold loan) அதிக தொகை வழங்கி வருவதாக தங்க நகைக் கடன் நிறுவனங்கள் சங்கம் (Association of Gold Loan Companies) இந்திய ரிசர்வ் வங்கியிடன் (RBI) புகார் அளித்துள்ளது.
தங்க நகை அடமானத்துக்கு எவ்வளவு கடன்?
பொதுவாக, இந்தந்த கடன்களுக்கு இவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் Loan to Value (LTV) என்று கூறுவார்கள்.
இந்த எல்.டி.வி மதிப்பின்படி, தங்க நகைக் கடன் மூலம் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளுக்கு, அதன் மதிப்பின் 75 சதவிகிதத்தை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கடனாக கொடுக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ இந்த விதியை ரிசர்வ் வங்கி சற்று மாற்றி, விவசாயம் அல்லாத காரணங்களுக்காக வாங்கப்படும் தங்க நகை கடன்களுக்கு தங்க நகையின் மதிப்பில் 90% வரை வழங்கலாம் என்று கூறியது. இந்த மாற்றம் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 6 முதல் மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும் என்றும்தான் கூறப்பட்டது.
90% வரை கடன்…
ஆனால், “பல வங்கிகள் இன்னமும் இந்த 90% நகை கடன் வரைமுறையையே இன்னும்கூட பின்பற்றி வருகின்றன. இது விதிமுறைக்கு எதிரானது என்றும், விதிமுறையை மீறும் வங்கிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தங்க நகைக் கடன் நிறுவனங்கள் சங்கம் இந்திய ரிசர்வ் வங்கியிடன் புகார் அளித்துள்ளது.
நகைக் கடன் தருவதில் ஆர்வம் காட்டும் வங்கிகள்
தற்போது வங்கிகள் பிற கடன்களை விட விவசாயத்திற்காக வாங்கப்படும் தங்க நகைக் கடன்களில் அதிகம் கவனம் செலுத்துக்கின்றன. இந்த கடனை வாடிக்கையாளர்கள் ஒருவேளை கட்டமுடியாதபட்சத்தில், இந்த நகைகளை எளிதாக ஜப்தி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது பொதுவாகவே தங்க நகைக் கடன்களை வங்கிகள் தருவது அதிகரித்துள்ளது.