“புதின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” – அலெக்ஸி நவல்னி மரணம் குறித்து அவரது மனைவி ஆவேசம்

பெர்லின்: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டால் விளாடிமிர் புதினும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமல் போக மாட்டார்கள் என்று அலெக்ஸியின் மனைவி தெரிவித்துள்ளார்.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா கூறுகையில், “எனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசிடமிருந்து வந்துள்ளதால் அதில் எனக்கு சந்தேகம் உள்ளது. புதின் மற்றும் அவரது அரசை நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் பொய்யைத்தான் சொல்வார்கள். ஒருவேளை அந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் புதின், அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள், அவரது அரசாங்கம் எனது கணவருக்கு செய்த அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த நாள் விரைவில் வரும்.

விளாடிமிர் புதினும், அவரது அரசாங்கமும் எனது நாடு, நமது நாடான ரஷ்யாவுக்கு சமீப ஆண்டுகளாக செய்துவரும் மோசமான விஷயங்களுக்கு தனிப்பட்டமுறையில் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல ரஷ்யாவில் நடந்து வரும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக சர்வதேச சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்தார் என்று அந்நாட்டு சிறைத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. அவருக்கு வயது 47. இவர், புதினை கடுமையாக எதிர்த்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது, தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் என்ற பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் அலெக்ஸி நவல்னி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் நவல்னி அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிறையில் வெள்ளிக்கிழமை வாக்கிங் சென்ற நவல்னி திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாகவும், இதன்பின் மருத்துவர்கள் முதலுதவிக்கு பின் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், என்னும் சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தாகவும் ரஷ்ய சிறைத் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. நவல்னியின் மரணம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.