சாம்ராஜ்நகர் : பிரசித்தி பெற்ற ஹிமவத் கோபாலசுவாமி மலையில், பக்தர்கள், சுற்றுலா பயணியர் இருக்கும் நேரத்தை கோவில் நிர்வாகம் குறைத்துள்ளது.
சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டில் உள்ள ஹிமவத் கோபாலசுவாமி மலை, வரலாற்று பிரசித்தி பெற்றது. இங்குள்ள கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
ஆண்டு முழுதும் பனிமூட்டம் இருப்பதால், சுற்றுலா பயணியரையும் ஈர்க்கிறது. இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்துக்கு, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பெருமளவில் மக்கள் வருவர்.
இதற்கு முன் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கோபால சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி இருந்தது.
சமீப நாட்களாக இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது வன விலங்குகளுக்கு தொந்தரவாக உள்ளது.
காட்டு யானைகள்
மாலை நேரத்தில் காட்டு யானைகள் நடமாடுகின்றன. இதே நேரத்துக்கு ஹிமவத் கோபாலசுவாமி மலைக்கு வரும் சுற்றுலா பயணியர், காட்டு யானைகள் அருகில் சென்று ‘செல்பி’ வீடியோ எடுக்கின்றனர்.
இதை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். யானைகளால் சுற்றுலா பயணியருக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்துவது இல்லை.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மலைக்கு வரும் நேரத்தை குறைக்கும்படி வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணியர், பக்தர்கள் மலைக்கு வர அனுமதி அளித்து, தாசில்தார் ரமேஷ்பாபு உத்தரவிட்டுள்ளார். தினமும் மதியம் 3:00 மணி வரை மட்டுமே, கோபாலசுவாமி மலைக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் போக்குவரத்து இருக்கும்.
தாசில்தார் உத்தரவு
கோவிலில் இருந்து மாலை 3:00 மணிக்கு புறப்படும் பஸ்சில் பக்தர்கள், சுற்றுலா பயணியர்; மாலை 4:30 மணிக்கு புறப்படும் பஸ்சில் கோவில் ஊழியர்கள் மலையில் இருந்து இறங்கி விட வேண்டும் என, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த வாசத்தால் ஈர்க்கப்பட்டு, காட்டு யானைகள் கோவில் அருகில் வருகின்றன.
எனவே, பிரசாதம் வழங்க மலை அடிவாரத்தில், மாற்று வசதி செய்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 3:00 மணிக்கு பின், மலைக்குச் செல்ல முடியாததால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருத்தம் அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்