Doctor Vikatan: பப்பாளிப்பழம் சாப்பிட்டால் அதிகரிக்கும் உடல் சூடு… தவிர்க்க வழிகள் உண்டா?

Doctor Vikatan: எளிதாகக் கிடைக்கும் பப்பாளிப்பழம் (Papaya) ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள். ஆனால், அதில்  சில துண்டுகள் அதிகம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் கூடி கஷ்டப்படுத்துகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்… விதையில்லாத பப்பாளிப்பழம் நல்லதா…. ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு பப்பாளிப்பழம் சாப்பிடலாம்?

-என்.கோமதி, நெல்லை-7 

  பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பப்பாளிப்பழம் சாப்பிட்ட உடன் உடல் உஷ்ணம் அதிகரிப்பதாக உணர்பவர்கள், பழம் சாப்பிட்டதும் 50 மில்லி பால் எடுத்துக்கொள்ளலாம். பால் பிடிக்காதவர்கள் சிறிதளவு பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்.

எப்போதுமே விதைகள் உள்ள பப்பாளிப் பழங்களைத்தான் சாப்பிட வேண்டும். விதைகளற்ற பழங்களைச் சாப்பிடக்கூடாது. விதையுள்ள பழங்களைச் சாப்பிடும்போதுதான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமடையும். பப்பாளிப் பழத்தைப் பொறுத்தவரை மிகவும் கனிந்த பழத்தைவிட, செங்கனியாக இருப்பது சிறந்தது. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள்கூட அதை எடுத்துக்கொள்ளலாம், சர்க்கரை அளவு அதிகரிக்காது. 

papaya with seeds

பப்பாளியில் எக்கச்சக்கமான சத்துகள் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ சத்து அபரிமிதமாக இருக்கும். கல்லீரல் ஆரோக்கியத்துக்கான சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம்.  இத்தனை சத்துகள் இருந்தாலும், பப்பாளியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பெரிதாக ஒரு துண்டும், சின்னதாக ஒரு துண்டும் மட்டுமே எடுத்துக்கொண்டால் போதுமானது அல்லது நறுக்கிய துண்டுகள் ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

அதிகபட்சமாக 100 முதல் 150 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்ட வேண்டாம். இந்தப் பழத்தில் நார்ச்சத்தும் மிக அதிகம். கண்களுக்கு நல்லது. உடல் சூடாக உள்ளபோது இந்தப் பழத்தை எடுக்க வேண்டாம். நீர்க்கடுப்பு உள்ளபோதும் இந்தப் பழத்தை எடுக்க வேண்டாம்.

Urinary Infection (Representational Image)

செரிமானத் தன்மை மிகக் குறைவாக இருக்கும்போது மிகக்குறைந்த அளவுதான் பப்பாளி சாப்பிட வேண்டும். அதாவது, 50 கிராம் அளவு போதுமானது. அதுவே, வயிறு ஆரோக்கியமாக இருக்கும்போது 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம். காலை உணவுக்கு பதில் பப்பாளிப்பழத்தை மட்டுமேகூட எடுத்துக்கொள்ளலாம். காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது என்றாலும், இந்தப் பழத்தை காலை, மதியம், இரவு என எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.