சிவகாசி அருகே இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அவர்கள், “சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின், வீரமணிக்கு நாகஜோதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். வீரமணி – நாகஜோதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், முதல்மனையின் சகோதரர் மருதுபாண்டி என்பவர், தன் உடன்பிறந்த சகோதரியின் வாழ்க்கை நாசமாகி விட்டதே என்ற கோபத்தில் வீரமணியிடம் அடிக்கடி அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வீரமணியும், போலீஸில் புகார் ஏதும் கொடுக்காமல் விட்டுவிட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீரமணியின் வீட்டிற்கு சென்ற மருதுபாண்டி, கணவன்-மனைவி இருவரையும் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வீரமணி மற்றும் நாகஜோதியை மீட்ட உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவரின் நிலைமையும் மோசமாகவே, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி வீரமணி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ், வழக்கு பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றுமொரு கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, “சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(33), திருமணமானவர். செல்வராஜ், சிவகாசியில் உள்ள குடிநீர் சேவை நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்தநிலையில், அதேப்பகுதியில் அச்சகத்தில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவனுடன் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலை முடிந்ததும் இருவரும் சேர்த்து ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது ஒருவருக்குக்கொருவர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து செல்வராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை, மீட்டவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, இதுதொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY