நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் வேட்பாளர் தேர்வு மற்றும் விருப்பமனு விநியோகத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., தேசிய கட்சிகள் பா.ஜ.க., காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிட்டுள்ளன.
தொகுதிகளை பங்கீட்டுக் கொள்வதிலும், வெற்றிவாகை சூடுவதிலும் கட்சிகள் கவனமுடன் செயல்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் ஆளும்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் தரப்பில் போட்டாப்போட்டி நடக்கின்றன.

இதுகுறித்து தி.மு.க. உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் தொகுதியை இம்முறை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யாமல் தி.மு.க.வே நேரடியாக போட்டிப்போட வேண்டும் என்று கோரிக்கையை விடுத்திருக்கிறோம். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு பெண்கள் உரிமை தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், காலை உணவு திட்டம் உள்பட எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை மக்களின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழக மக்களிடையே இந்த அரசுக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அமைச்சரவையின் முக்கிய துறைகளான நிதி மற்றும் வருவாய் என இரண்டுதுறைகளின் அமைச்சர்களும் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்து இருப்பதால் தி.மு.க. சார்பில் நேரடியாக வேட்பாளர்கள் போட்டியிடுவது தொகுதி வெற்றிக்கு கூடுதல் பலத்தை தரும்.
வேட்பாளர் தேர்விலும் இவர், அவர் என குழப்பமில்லாமல் கட்சியினர் அனைவரும் ஒரே மனதாக தமிழச்சி தங்கப்பாண்டியனை நிறுத்த வேண்டும் என ஆசைப்படுகிறோம். தற்போது அவர் தென் சென்னை தொகுதியில் எம்.பி-யாக இருக்கிறார். தென் சென்னை தொகுதியை கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்காக குறி வைப்பதால், தமிழச்சி தங்கப்பாண்டியன் விருநகரில் போட்டியிடலாம்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உடன் பிறந்த சகோதரி, சொந்த மாவட்டம், விருதுநகர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகப்பட்டவர், அதேசமயம் தொகுதியின் தேவைகளையும் ஏற்கனவே நன்கு புரிந்திருப்பவர் என்பதாலும் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்திருக்கிறோம்.

ஏற்கனவே விருப்பமுனு விநியோகம் தொடங்கி இருக்கும் நிலையில் கட்சி முடிவெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்துவதென்றால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவது உறுதி. கூட்டணி கட்சிகளில் ம.தி.மு.க. சார்பில் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் சீட் பெற முயற்சிப்பதாக தகவல்கள் வருகிறது. யார் வேட்பாளராக நின்றாலும் வெற்றிவாகை சூடப்போவது தி.மு.க. கூட்டணி தான். ஆனால், அந்த வெற்றி தி.மு.க. நேரடி வேட்பாளரால் வரும்போது மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் என்பது உண்மை” என்றனர்.

அ.தி.மு.க. சார்பில் பேசியவர்கள், “தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையுமே தி.மு.க.அரசு நிறைவேற்றவில்லை. மாறாக விலைவாசி உயர்வு, பத்திர பதிவுக்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பெண்கள் உரிமைத் தொகை வழங்குவதில் பாரபட்சம், போன்றவற்றால் மக்கள் இந்த ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். ஆட்சி மாற்றம் எப்போது வரும் என காத்திருக்கிறார்கள். ஆகவே தி.மு.க. அரசியல் மீதான வெறுப்பு நிச்சயம் அ.தி.மு.க.விற்கு சாதகமான வாக்குகளை பெற்று தரும்.

அ.தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள். தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட மாநில தகவல் தொடர்புஅணி செயலாளர் ராஜ் சத்யன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர் சன்ஷைன் கணேசன் ஆகியோர் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் யார் வேட்பாளராக நின்றால் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு சீட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விருதுநகர் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்” என்றனர்.
திராவிட கட்சிகளை தவிர்த்து பா.ஜ.க.விலும் நேரடி வேட்பாளர்கள் களம் இறங்குவதற்கு முனைப்பு காட்டி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் மத்திய அரசின் முன்னேற விளையும் மாவட்டங்களின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் சார்ந்து பல்வேறு பணிகளையும் நேரடியாக விருதுநகர் மாவட்டத்தில் செய்ய முடியும் என்பதால் பா.ஜ.க.வேட்பாளர்கள் நேரடியாக களம் இறங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

அந்த வகையில் பேராசிரியர் ராம சீனிவாசன், விருதுநகர் பா.ஜ.க.கிழக்கு மாவட்ட நிர்வாகி ஜவஹர் மற்றும் திருமங்கலத்தை பூர்வீகமாக கொண்ட வேதா தாமோதரன் ஆகியோர் சீட்டுக்காக முயற்சி செய்து வருகிறார்கள். இதிலும் உட்கட்சி அரசியல் நடப்பதெல்லாம் தனிக்கதை. இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் பேசியவர்கள், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கனின் வெற்றி பறிபோனதற்கு கட்சிக்குள் நடந்த உள்ளடி அரசியலே காரணம். தற்போது வரையிலும் அந்த அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்சிக்குள் நடக்கும் அனைத்து விஷயங்களும் மாநில தலைமைக்கும், தேசிய தலைமைக்கும் தெரியும். ஆகவே கட்சியின் நலனுக்காகவும் தொகுதி மக்களின் நலனுக்காகவும் சிந்தித்து கட்சித்தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம். இம்முறை விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெறுவது உறுதி” என்றனர்.

இதுதவிர இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி ஆகாத நிலையில் தே.மு.தி.க., பா.ம.க.உள்ளிட்ட கட்சிகளிலும் விருதுநகர் தொகுதியை குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்க திட்டங்கள் உள்ளது. அதன்படி, தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரும் தொகுதிக்குள் அடிப்படுகிறது. பா.ம.க. சார்பில் மாநில பொருளாளர் திலகபாமா களத்தில் இறங்க திட்டங்கள் தீட்டி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆக மொத்தம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி இந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாற இருப்பது மட்டும் உண்மை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY