மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. புனே, நாசிக் போன்ற இடங்களில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இந்த போதைப்பொருள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்துவந்த லலித் பாட்டீல், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.
இன்று காலையில் புனே போலீஸார் தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பைரவ் நகர் மற்றும் விசரன்வாடி பகுதியில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் அனில் சாப்ளே என்பவரின் தொழிற்சாலையில் இருந்துதான் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக, புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மற்ற இரண்டு பேர் கூரியரில் வேலை செய்பவர்கள் ஆவர். அனிலுக்கும் ஏற்கெனவே இதே போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் லலித் பாட்டீலுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் போதைப்பொருளை டெல்லிக்கும் அனுப்பி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள குர்கும்ப் பகுதியில் இருக்கும் சேமிப்பு கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 400 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடியாகும்” என்று தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை `மியாவ் மியாவ்’ என்று அழைப்பது வழக்கம். இதை பெரிய அளவில் பார்ட்டிகளில் பயன்படுத்துவது வழக்கமாகும். அதே சமயம் விலையும் குறைவு எனச் சொல்லப்படுகிறது.