கான்பூர்: நரேந்திர மோடியின் ஆட்சியில் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும் வேலை பெற முடியாது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் உரையாற்றிய அவர், “இந்திய மக்கள் தொகையில் 50% பிற்படுத்தப்பட்டோரும், 15% பட்டீயலின மக்களும், 8% பழங்குடி மக்களும், 15% சிறுபான்மையினரும் உள்ளனர். ஆனால், இந்த நாட்டில் இந்தப் பிரிவினருக்கு வேலை கிடைக்காது.
நீங்கள் பிற்படுத்தப்பட்டவராகவோ, பட்டியலினத்தவராகவோ, பழங்குடியினத்தவராகவோ, சிறுபான்மையினராகவோ இருந்தால், மோடியின் ராம ராஜ்ஜியத்தில் உங்களுக்கு கிடைக்காது. நீங்கள் வேலை பெறுவதை மோடி விரும்பவில்லை. மோடியின் அரசு பாரபட்சமாகத்தான் நடந்து கொள்கிறது. ஊடகங்களிலோ, பெரிய நிறுவனங்களிலோ, அரசின் உயர் பதவிகளிலோ பிற்படுத்தப்பட்டவர்களோ, பட்டியலின சமூகத்தினரோ வேலை பெற முடியாத அளவுக்கு இந்தியா சாதி ரீதியாக பிரிந்து கிடக்கிறது.
நாட்டில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கிறார்கள். அயோத்தியில் பிராண பிரதிஷ்டை நடந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் பங்கேற்றவர்களில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள், எத்தனை பேர் பட்டியலினத்தவர், எத்தனை பேர் பழங்குடியின மக்கள்? பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு இல்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே இந்தியாவின் வளர்ச்சிக்கான புரட்சிகர நடவடிக்கையாகும். அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் அவர்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிய இத்தகைய கணக்கெடுப்பு மட்டுமே உதவும். தற்போது நாட்டின் ஒட்டுமொத்த வளமும் 2-3 சதவீத மக்களிடமே உள்ளது. அதானி, அம்பானி, டாடா, பிர்லா போன்ற 2-3 சதவீதத்தினர்தான் உங்களை ஆட்சி செய்கிறார்கள். அவர்கள்தான் புதிய இந்தியாவின் மகாராஜாக்கள்.
சில நேரங்களில் உங்கள் ஆவணங்கள் கசியவிடப்படுகின்றன. சில நேரங்களில் நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகிறீர்கள். உங்கள் மீது ஜிஎஸ்டி திணிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை திணிக்கப்படுகிறது. அரசு துறைகளுக்கான வேலைவாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுவதில்லை. அக்னி வீரர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்பும் பறிக்கப்பட்டுவிட்டது” என்று ராகுல் காந்தி பேசினார்.