Fali S Nariman: `எமெர்ஜென்சி முதல் காவிரி, ஜெ., வழக்கு வரை…' – ஃபாலி நாரிமனின் முக்கிய பக்கங்கள்!

புகழ்பெற்ற சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் இன்று (பிப். 21) காலமானார். 75 ஆண்டுக்காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய அவருக்கு 95 வயது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக அவர் பணியாற்றினார்.

உச்ச நீதிமன்றம்

புகழ்பெற்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 1972-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டுவரை இருந்தார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு, அந்தப் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் இருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய ரோஹின்டன் நாரிமன், ஃபாலி நாரிமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபாலி நாரிமனுக்கு,1991-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2007-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டன. லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். நீதித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, உலக அளவில் அறியப்படும் சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் ஆஜரானவர் ஃபாலி நாரிமன்.

நீதிமன்றம்

போபால் விஷவாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்காக வாதாடினார் ஃபாலி நாரிமன். போபால் விஷவாயு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நீதிமன்றத்துக்கு வெளியே ரூ.470 மில்லியன் டாலர் இழப்பீடு பெற்றுத்தந்தார். ‘அது தவறா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘ஆம்’ என்று பதிலளித்தார். மேலும், ‘அது எனக்கு பெருமைதரக்கூடிய வழக்கு என்று அப்போது நினைத்தேன். ஆனால், அது தவறு என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்தேன். அது வழக்கு அல்ல. அது ஒரு துயரம்’ என்றார் ஃபாலி நாரிமன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். ஆனால், அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதாவுக்காக நீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் பெற்றுக்கொடுத்தார் ஃபாலி நாரிமன்.

ஜெயலலிதா

நர்மதா மறுவாழ்வு வழக்கில் குஜராத் அரசுக்கு ஆதரவாக ஃபாலி நாரிமன் வாதாடினார். ஆனால், கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்டு, பைபிள்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, அந்த வழக்கிலிருந்து அவர் விலகினார்.

தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், கர்நாடகாவுக்காக ஆஜரானவர் ஃபாலி நாரிமன். இந்த வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடகாவுக்காக அவர் வாதாடியிருக்கிறார். அந்த வழக்கில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி ஆறு

ஆனால், கர்நாடகாவில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை என்று சொல்லி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து கர்நாடகா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா நிறைவேற்ற மறுத்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை என்பதால், அந்த வழக்கில் கர்நாடகாவுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டேன் என்று ஃபாலி நாரிமன் கூறிவிட்டார்.

ஃபாலி நாரிமனின் சுயசரிதையான, `Before Memory Fades’ புத்தகம், சட்ட மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. `The State of Nation’, `God Save the Hon’ble Supreme Court’ உள்ளிட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார்.

`நான் மதச்சார்பற்ற இந்தியாவில் வாழ்ந்து செழித்திருக்கிறேன். கடவுள் விரும்பினால், காலத்தின் முழுமையில், நான் மதச்சார்பற்ற இந்தியாவில் இறக்க விரும்புகிறேன்’ என்று ஃபாலி நாரிமன் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரின் மறைவு, நீதித்துறை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு பேரிழப்பு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.