கரூர்: தமிழகத்தின் அரசியல் களத்தை மாற்றுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரத்தில் ‘என் மண் என் மக்கள் நடைபயணம்’ மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதில் அண்ணாமலை பேசியதாவது.. “தமிழக மக்கள் அரசியலில் நேர்மையை எதிர்பார்க்கின்றனர். நடைபயணத்தில் திமுகவின் 33 மாத ஆட்சியை தோலுரித்து காட்டுகின்றோம். மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை கூறுகின்றோம். 2024-ம் ஆண்டு தேர்தலில் 3-வது முறையாக மோடி பிரதமராக உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. அவர் 3-வது முறை பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாத. 400 எம்பிக்களுக்கு மேல் பெற வேண்டும். அதற்கு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
பாஜக தெளிந்த நீரோடை. நேர்மை நம் பக்கம். அரசியலில் நேர்மை, நாணயம், நல்ல மனம், சேவை செய்யும் எண்ணம் ஆகியவற்றை கொண்டுள்ளோம். தமிழகத்தின் அரசியல் களத்தை மாற்றுவோம். ஊழல், குடும்ப ஆட்சி, தனிமனித துதி பாடுதல் ஆகியவற்றை மாற்றுவோம்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 250 நாளுக்கு மேல் சிறையில் உள்ளார். அவர் தம்பி தலைமறைவாக உள்ளார். குடும்ப வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு ஊழல் ஆட்சி செய்கின்றனர்.
ஆனால், பாஜக தொலைநோக்கு பார்வையோடு செயல்படுகிறது. சாமானியனும் மக்கள் பணியாற்ற முடியும் என காட்டியுள்ளது. பாஜக நிச்சயமாக கள்ளுக்கடைகளை திறக்கும். திமுக அரசு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் என அவர்களது மதுபான நிறுவன தயாரிப்புகளை கொள்முதல் செய்து ரூ.50,000 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. டாஸ்மாக் கடைகளை 3 ஆண்டுகளில் மூடுவோம். யாரையும் குடிக்காதே என்று சொல்ல முடியாது. மதுபானத்திற்கு பதிலாக கள் குடிக்கலாம்.
குடும்பத்தில் முதல் தலைமுறை அரசு ஊழியர்களை உருவாக்க இடஒதுக்கீடு கொண்டு வருவோம். கிராமத்தில் உள்ளவர்களும் நகரத்திற்கு இணையான கல்வி பெற நடவடிக்கை எடுப்போம். ஒரு மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகளை திறப்போம். அதற்கு காமராஜர் பள்ளி என பெயர் சூட்டுவோம். பாஜக தொலைநோக்கோடு கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, காவல் துறை, மறுசீரமைப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு செயல்படுகிறது. காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை, இரு மடங்கு சம்பளம் கொண்டு வருவோம். தமிழகத்தில் 2 கட்சிகளும் வேண்டாம். மாற்றங்கள் வரவேண்டும். 2024-ம் ஆண்டு வாய்ப்பளியுங்கள் 2026-ம் ஆண்டு எங்களை தேர்வு செய்வதுப்போல செயல்படுவோம். தமிழகம் மாறும். அரசியல் களம் மாறும். 2024-ம் ஆண்டு மாற்றம் ஏற்படும். 40-க்கு 40 வெற்றி பெறுவோம்” என்றார்.
மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் மாநில பொதுச்செயலாளர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சுமார் 1 கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணமாக அண்ணாமலை நடந்து வந்தார். அப்போது இளைஞர்கள், பெண்களுடன் கைகுலுக்கியும் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.