தல தோனி சென்னைக்கு திரும்புவது உறுதி! ஐபிஎல் 2024 தொடக்க போட்டியில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

ஐபிஎல் 2024 தொடர் எப்போது தொடங்குகிறது? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது. தல தோனியின் தரிசனத்தை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் பார்க்க முடியும். ஆம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இம்முறை ஐபிஎல் முதல் போட்டியில் விளையாடுகிறது. அதுவும் சிஎஸ்கேவின் கோட்டையான சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவது எப்போது?

நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் ஐபிஎல் 2024 தொடருக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் உத்தேச தேதிகள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இப்போட்டியில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க, முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அறிமுகமாக இருக்கும் சுப்மன் கில் தலைமையில் குஜராத் அணி விளையாட இருக்கிறது. 

தோனி தரிசனத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இப்போட்டியை எதிர்நோக்கி இருக்கின்றனர். ஐபிஎல் தொடர் தொடக்கப்போட்டியே தங்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்ற பூரிப்புடன் அவர்கள் இருக்கிறார்கள். அதாவது முதல் ஐபிஎல் 2024 போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. அதில் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமாட இருக்கிறது. அதனால் தோனியை இம்முறை நேரடியாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் அவர் ஐபிஎல் தொடரில் களமிறங்குவது ஏறக்குறைய இதுவே கடைசி என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.

தோனி ஓய்வு பெறப்போவது உறுதியா?

தோனி இப்போது 40 வயதைக் கடந்து ஆடிக் கொண்டிக்கிறார். அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிக்கலாம். கடந்த ஆண்டே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த அவர், அண்மையில் தான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். நீண்ட நேரம்  களத்தில் இருக்க முடியாது என்பதை உணர்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் என தோனியும் கூறியிருக்கிறார். இருப்பினும் அவர் இன்னும் ஒருசில ஐபிஎல் தொடர்கள் விளையாடுவார் என சிஎஸ்கே நம்பிக்கை தெரிவித்தாலும், இந்தமுறை தோனியின் ஓய்வு அறிவிப்பு வெளியாவது உறுதி என்கிறது கிரிக்கெட் வட்டாரம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.