புதுடெல்லி: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக, வரும் மார்ச் 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 10-ம்தேதி அறிவித்தது. கடந்த 2014-ம் ஆண்டில் மக்கள தேர்தல் தேதி மார்ச் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதுபோல் வரும் மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு மாநிலங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கையை தேர்தல்ஆணையம் தொடங்கி விட்டது. இந்நிலையில் வரும் மார்ச் 3-ம் தேதி மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சாணக்யாபுரியில் உள்ள சுஸ்மா சுவரான் பவனில் நடைபெறவுள்ளது. இதில் மத்தியஅமைச்சர்கள், இணை அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
இதில் முக்கிய கொள்கை விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. பலதிட்டநடவடிக்கைகளின் அமலாக்கம் குறித்தும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் பிரதமர் மோடி தனது தொலை நோக்கு பற்றி பேசுவார் எனத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக கூட்டப்படும் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகலாம்.