முன்னெடுத்துச் சென்ற பிரியங்கா காந்தி!
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாடி கட்சிகள் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆரம்பத்தில் 11 தொகுதிகள் மட்டுமே தருவதாக சொன்ன சமாஜ்வாடி, பின்னர் அந்த எண்ணிக்கையை 17 ஆக அதிகரித்து கொடுக்க முன் வந்தது. ஆனாலும் 19 தொகுதிகள் கொடுக்கும் படி காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருந்தது. பேச்சுவார்த்தையில் சில தொகுதிகளை காங்கிரஸ் குறிப்பிட்டு கேட்டுக்கொண்டது. ஆனால் சமாஜ்வாடி கட்சி அதனை விட்டுக்கொடுக்க தயங்கியது.
இதனால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவாகி இருக்கிறது. இதன்படி காங்கிரஸ் 17 தொகுதியில் போட்டியிடும் என்றும், சமாஜ்வாடி கட்சி 62 தொகுதியிலும், கூட்டணி கட்சியான ஆசாத் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என்று இரு கட்சிகளும் அறிவித்து இருக்கிறது. திடீரென சமாஜ்வாடி கட்சியுடன் தொகுதி பங்கீடு முடிவானதில் பிரியங்கா காந்தி முக்கிய பங்கு வகித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ”முடங்கி இருந்த பேச்சுவார்த்தையை பிரியங்கா காந்திதான் முன்னெடுத்துச் சென்றார்.
பிரியங்கா காந்தி முதலில் தனது சகோதரர் ராகுல் காந்தியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசினார். பின்னர் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடமும் பிரியங்கா காந்தி பேசினார். அதன் பிறகே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி மொரதாபாத் தொகுதியை கேட்பதை கைவிட்டது. இதையடுத்து வாரணாசி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க சமாஜ்வாடி கட்சி சம்மதம் தெரிவித்தது. இது தவிர சிதாபூர் மற்றும் ஹத்ராஸ் ஆகிய தொகுதிகளை மாற்றிக்கொடுக்க சமாஜ்வாடி கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது” என்றார்.
இதையடுத்து இரு கட்சிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் முக்கிய பங்கு வகித்த பிரியங்கா காந்திக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மாநில தலைவர்களிடம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவற்றை கேட்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்தும் சுமூகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். வரும் 24-25ம் தேதிகளில் ராகுல் காந்தி யாத்திரை மொரதாபாத் வரும் போது அதில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள இருக்கிறார். இதன் மூலம் பெரிய மாநிலமான உ.பி-யில் இந்தியா கூட்டணி தனது தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. மேலும் டெல்லியிலும் ஆம் ஆத்மி உடனான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் கிட்டதட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY