தி.மு.க-வைத் தொடர்ந்து அ.தி.மு.க-வும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்க விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கியிருக்கிறது. முதல் நாளில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்களே அதிகப்படியான விருப்ப மனுக்களை வாங்கியிருப்பது பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. இதன் பின்னணி குறித்து விசாரித்தால், ‘தேர்தல் கூட்டணி இதுவரை சரியாக அமையாததால், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களும் தயக்கம் காட்டியதாகத் தகவல் வெளியானது. இதை விருப்ப மனு வாங்குவோர் எண்ணிக்கையே காட்டிக்கொடுத்துவிடும் என்பதால், ‘போட்டியிட விருப்பமிருக்கிறதோ இல்லையோ… அத்தனை மாவட்டச் செயலாளர்களும் குறைந்தது இரண்டு விருப்ப மனுக்களாவது வாங்கவேண்டும்’ என்று மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடியிடம் இருந்து உத்தரவு பறந்திருக்கிறது. எனவே, முதல்நாளில் தலைநகர மா.செ-க்கள் விருப்ப மனு வாங்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து பிற மா.செ-க்களும் படையெடுப்பார்கள்’ என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில்!.
மதுரையைவிட, விருதுநகர் தொகுதியே தனக்கு சேஃபாக இருக்கும் என்று நினைத்து கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்துவந்தார் அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன். ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் முக்கியக் கட்சிகள் இணையாதது, தனித்துக் களமிறங்கும் பா.ஜ.க – ஓ.பி.எஸ் கூட்டணி, வலுவாக இருக்கும் தி.மு.க கூட்டணி எனப் பல்வேறு விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தவர், ‘இன்னொரு தோல்வியைத் தாங்க முடியாது’ என்று அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டாராம். அதற்கு பதிலாக எடப்பாடியிடம் மாநிலங்களவை எம்.பி கேட்டுப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் சத்யன்.
இந்தத் தகவலறிந்து, அந்தத் தொகுதியைக் குறிவைத்து வேலை பார்த்துவரும் முன்னாள் மாஜி உற்சாகத்தில் மிதக்கிறாராம்.
தி.மு.க சின்னத்தில் வென்று, பா.ஜ.க கூட்டணிக்குத் தாவிய அந்த வள்ளல் பிரமுகர், இந்தத் தேர்தலில் தனக்கொன்று, தனக்குப் பிரியமான நபருக்கொன்று என இரண்டு சீட்டுகள் கேட்கிறாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பிரியமான நபர் பா.ஜ.க-வில் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். தனக்கு சிட்டிங் தொகுதியையும், ஆதரவாளருக்கு தென்சென்னை தொகுதியையும் கேட்டவர், அதற்காக நடைப்பயணத்துக்கு ஆன செலவில் பெரும் பங்கையும் ஏற்றுக்கொண்டாராம்.
ஆனால், தற்போது தென்சென்னை தொகுதியை வேறு ஒருவருக்குக் கொடுக்கும் முடிவுக்கு டெல்லி தலைமை வந்திருப்பதை அறிந்து கொதித்துப்போய்விட்டாராம் வள்ளல் பிரமுகர். ‘இப்படி ஏமாத்திட்டீங்களே தம்பி…” என நேரடியாகவே மாஜி காக்கி தலைவரிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் வள்ளல். “அண்ணே… இன்னும் வேட்பாளர் பட்டியல் இறுதியாகவில்லை. நிச்சயம் நீங்கள் கேட்டது கிடைக்கும். அதுவரை யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ள வேண்டாம்” என ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் மாஜி காக்கி.
பட்ஜெட் உரை சட்டமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்பு, கடுகளவுகூட விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பது காலம் காலமாக அதிகாரிகள் கடைப்பிடிக்கும் கறார் நடைமுறை. ஆனால், இந்த முறை அரசுத் தரப்பே தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முக்கியத் தகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டது என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள். சட்டமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கும்போதே, அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை டிஜிட்டல் கார்டுகளாக விளம்பரம் செய்ய முடிவுசெய்த ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனமே இந்த மரபு மீறலுக்குக் காரணமாம். “உங்கள் ஆர்வம் புரிகிறது… ஆனால், சபையில் அதிகாரபூர்வமாக வாசிப்பதற்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் பட்ஜெட் தகவல்களைக் கொடுக்கக் கூடாது” என்று துறை அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சம்பந்தப்பட்டவர்கள் அதைக் காதிலேயே வாங்கவில்லையாம். “இதெல்லாம் ரொம்பத் தப்புங்க… இதேபோல, நாளை எதிர்க்கட்சியினரும் பட்ஜெட் தகவல்களை முன்கூட்டியே கேட்டால் என்ன செய்வது?” என்று லாஜிக்காகக் கேட்கிறார்கள் அதிகாரிகள்!
மதுரையில், கடந்த பிப்ரவரி 18-ம் தேதியில் மட்டும் தி.மு.க சார்பில் மூன்று நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற, ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி’க்கு மட்டும் மதுரையில் இருக்கும் மூன்று மாவட்டச் செயலாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு, ஆட்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆனால், அன்று மாலையில் நடந்த, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பிலான ஆ.ராசாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்டமே இல்லையாம்.
கூட்டம் நடந்தது மதுரை மாநகரில் என்பதால், வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் மூர்த்தியும், தெற்கு மாவட்டச் செயலாளரான மணிமாறனும் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமே கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். மாநகர் செயலாளராக இருக்கும் கோ.தளபதி எம்.எல்.ஏ மட்டும்தான் ஆட்களை அழைத்துவந்திருந்தாராம். “முதல்வரோ, உதயநிதியோ வந்தால் மட்டும் பிரமாண்டம் காட்டும் அந்த பல்லி, தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அடக்கி வாசிக்கிறதே?” என்று புலம்புகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY