ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் ஜோ ரூட் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் நேற்று ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 112 ரன்னுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின் ஜோ ரூட், போக்ஸ் சேர்ந்து அணியை மீட்டு, 6வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தனர்.
சிராஜ் ‘வேகத்தில்’ போக்ஸ் (47) அவுட்டாக, சற்று நிம்மதி பிறந்தது. கடைசி கட்டத்தில் ராபின்சன் ‘கம்பெனி’ கொடுக்க, ரன் வேட்டையை ரூட் தொடர்ந்தார். ஆகாஷ் தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, சதம் எட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன் எடுத்திருந்தது.
இன்று (பிப்.,24) 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அரைசதம் கடந்த ராபின்சன் 58 ரன்னில் கேட்சானார். அடுத்துவந்த பஷீர், ஆண்டர்சன் ஆகியோர் ‘டக் அவுட்’ ஆக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை துவக்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement