விண்ணைத் தாண்டி வருவாயா: 14 வருடங்கள், ரி-ரிலீஸிலும் தொடரும் வெற்றி! தயாரிப்பாளர் மதன் சொல்வது என்ன?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா’ நேற்று 14வது ஆண்டைக் கொண்டாடியது. ரஜினியின் `சந்திரமுகி’ சாந்தி திரையரங்கில் 800 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அப்படி ஒரு சாதனையை `விண்ணைத் தாண்டி வருவாயா’ படைத்து வருகிறது. ரி-ரிலீஸில் சென்னையின் பிரபல மல்டிபிளக்ஸ் ஒன்றில் 750 நாள்களைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனிடம் பேசினோம்.

கௌதம் மேனன்

“என்னை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திய படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. கௌதம் மேனன் என்னோட காலேஜ் சீனியர். காலேஜ்ல இருந்தே நாங்க நண்பர்கள். ‘வேட்டையாடு விளையாடு’ல இருந்து பல படங்களை நானும் அவரும் சேர்ந்து முதல் காப்பி அடிப்படையில் தயாரிச்சிருக்கோம். ஒருநாள் கௌதம் கூப்பிட்டு ‘நீ இந்தப் படத்தைத் தயாரிக்கிறீயா?’னு கேட்டார். அப்படித்தான் தயாரிப்பாளர் ஆனேன்.

விண்ணைத் தாண்டி வருவாயா

இந்தப் படத்தோட மேஜிக்கே காதல்தான். குறிப்பா பிரேக் அப்! இந்தப் படம் வெளியான சமயத்துல அவ்ளோ புரிந்து கொண்டார்களோ இல்லையோ, இப்ப இந்த காலகட்டத்துக்கு ஏற்ற படமா இது இருக்கு. லவ் பிரேக் ஆப் ஆகுறதுக்கு முந்தைய சீன்ல ‘நான் உன்கூட வர்றேன்’னு ஜெர்ஸி சொன்னதும் கார்த்திக் ஒரு நொடி யோசிப்பார். ‘உன்னை நம்பி ஒரு பொண்ணு வர்றேன்னு சொன்னால், நீ யோசிப்பியா’ என்றுதான் ஜெர்ஸி பிரேக் அப் ஆகிப் போறா! நம்மள நம்பி ஒரு பொண்ணு வரும் போது, எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளோடு சேர்ந்து வாழுறதுதான் காதலனுக்கு அழகு. அவன் ஒரு நொடி யோசிச்சான்… பிரேக் அப்பிற்கு அதுவே வலுவான காரணமா அமைஞ்சிடுச்சு. இந்தப் படத்தின் மீது சிம்புவிற்கு நம்பிக்கை இருந்தது. ஆனா, இது காலம் கடந்தும் கல்ட் கிளாசிக்கா மாறும்ன்னு நானும் நினைச்சதில்ல.

முதல்நாள் படப்பிடிப்பிலிருந்தே, கௌதமும் சிம்புவும் நண்பர்களாகிட்டாங்க. சிம்புவின் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் என ஒவ்வொரு விஷயமும் கௌதம் செதுக்கின விஷயங்கள்தான். அதனாலதான் அவங்க இன்னிக்கு வரை நல்ல நண்பர்களா இருக்காங்க.

விண்ணைத் தாண்டி வருவாயா

இந்தப் படம் தயாரிக்கறதுக்கு முன்னாடி நானும் கௌதமும் சேர்ந்து ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ என்ற படத்தை தயாரிக்க இருந்தோம். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான் மியூசிக். ஆனா, அந்தப் படம் தொடங்கல. அந்த நட்பில்தான் ரஹ்மான் சார் இந்தப் படத்திற்குள் வந்தார். இந்தப் படத்தில் இன்னொரு தயாரிப்பாளரான எல்ரெட் குமாரை கௌதம்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். தயாரிப்பாளரா அவருக்கும் இதுதான் முதல் படம். எங்களோட விடிவி கணேஷும் தயாரிப்பாளராகச் சேர்ந்தார். இந்தப் படம் பிக்னிக் போலதான். ஒரு மாசம் கேரளாவுல, அடுத்த மாசம் கோவா, அதற்கடுத்த மாசம் வெளிநாடுனு பறந்தோம்.

தயாரிப்பாளர் மதன்

அதைப் போல, வெளி தயாரிப்பாளர்களின் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட ஆரம்பித்தது இந்தப் படத்தில் இருந்துதான். நாங்க புது தயாரிப்பாளர்கள்னால, எங்களுக்கு ரெட் ஜெயண்ட் கொடுத்த சப்போர்ட் மறக்க முடியாதது. படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்த விடிவி கணேஷ் சிம்புவை அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டார். அதில் அவங்க நண்பர்களானார்கள். அந்த நட்பு திரையில் தெரியும். இருவரும் இப்பவரை நல்ல நட்போடு இருக்காங்க. இப்படி நிறைய மெமரீஸை எங்களுக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ கொடுத்திருக்கு” என்றார் நெகிழ்ச்சியுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.